- Thursday, 31 January 2013 09:25
(File Photo)
விஸ்வரூபம் திரைப்பட விவகார குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று
செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் தெரிவிக்கையில் 'தமிழகத்தின் முதல்வராக தன்னால் செய்யப்பட வேண்டிய முதலாவது கடமை மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதும், மக்களின் தினசரி வாழ்க்கைக்கு எந்த இடையூறும் ஏற்பாடாது பாதுகாப்பதுமே. இது அதிகமான மக்களுக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை.
விஸ்வரூபம் திரைப்படம் ஆட்சேபணைக்குரியது. அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் ஏற்கனவே பல இஸ்லாமிய அமைப்புக்கள் தொடர்ச்சியாக முறையிட்டு வந்தன. தமிழகம் முழுவதும் 524 திரையரங்குகள் உள்ளன. 524 திரையரங்குகளுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிப்பதென்றால் அது சாத்தியமற்றது. அந்தளவு போதுமானதாக காவல்துறையினர் எம்மிடம் இல்லை. கொஞ்சம் கூடுதல் ஆபத்தான இடங்களில் குறைந்தது 10 பேராவது நிறுத்தப்படவேண்டும். அப்படியாயின், 56,000 ற்கு மேற்பட்ட காவல்துறையினர் 524 திரையரங்குகளிலும் நிறுத்தப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது என்பது, அங்கு கலவரம் நடைபெற்ற பின்னர் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதல்ல.
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல்ஹாசன் ரூ.100 கோடி செலவிடுவது என்பது அவரது தனிப்பட்ட முடிவை பொருத்தது. படத்தை தடை செய்வதில் எந்த அரசியலும், உள்நோக்கமும் இல்லை. கமல்ஹாசன் ப.சிதம்பரத்தை, வேட்டி கட்டிய ஒருவர் தான் தமிழகத்தின் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என பேசியதாலும், ஜெயா டி.விக்கு திரைப்பட உரிமத்தை தராததாலும் தான் இந்த தடை விதிக்கப்படுள்ளது என கூறப்படுவதை ஏற்க முடியாது.
கமல்ஹாசன் மீது எனக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை. கமல்ஹாசன், வேஸ்டி கட்டிய ஒருவர் தான் பிரதமராக வரவேண்டும் என கூறுவதென்றால் அது அவரது கருத்து சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்டது. ஒரு நாட்டின் பிரதமரை தெரிவு செய்வது கமல்ஹாசன் அல்ல, என்பது எனது நீண்ட அரசியல் அனுபவத்தில் என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஜெயாடீவி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால் நான் அதன் உரிமையாளர் அல்ல. இந்த விவகாரத்தில் செய்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை.
படத்திற்கு தடை விதிக்கப்பட்டதும் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிவிட்டார். முறையின் படி அவர் தமிழக அரசிடமும், இஸ்லாமிய அமைப்புக்களுடனும் பேசியிருந்தால் சுமூகமான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம்.
உண்மையில் விஸ்வரூபத்தை தடை செய்ய வேண்டியிருக்க வேண்டுமெனில் எப்போதோ தடை செய்திருக்கலாம். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இதில் அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை. கமல்ஹாசன் எந்த வகையிலும் என் எதிரியல்ல. 144வது சட்டத்தின் படி படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது பதற்றத்தை தணிப்பதற்காக தான். அந்த நேரம், படத்தின் ஒரு காட்சியையும் இடைநீக்கம் செய்ய கமல்ஹாசன் தயாராக இருந்திருக்கவில்லை.
உள்துறை அமைச்சர் மனீஷ் திவாரியின் கருத்துக்களுக்கு நான் பதில் அளிக்க தேவையில்லை. கருத்து சுதந்திரத்தை அனுமதிப்பது என்பது இங்கு கேள்வி அல்ல. சட்ட ஒழுங்கை காப்பதே இங்கு விவாதிக்கப்படவேண்டியது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும், கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் தமிழக முதல்வரை சந்திப்பதற்கு கடிதம் அனுப்பியிருந்தாகவும், எனினும் அவர் உயர் நீதிமன்றத்தை நாடிவிட்டதால் அச்சந்திப்பை நிராகரித்துவிட்டதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தற்போதும் நடிகர் கமல்ஹாசனும், இஸ்லாமிய அமைப்புக்களும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வரும் போது, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத சூழ்நிலையில் படத்தை வெளியிட தமிழக அரசுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை திமுக தலைவர் கருணாநிதி, விஸ்வரூபம் தடைக்கான காரணமாக தெரிவித்துள்ள விடயங்களுக்காக அவர் மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாகவும், கருணாநிதியின் அறிக்கையை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகள், மின் ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போவதாகவும் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
'கமல்ஹாசன் தனது பரம எதிரியல்ல. ஆனால் கருணாநிதிதான் அந்த எதிரி. எம்.ஜி.ஆருக்கு கமலை பற்றி கடிதம் எழுத வேண்டிய தேவை எனக்கு எதுவும் இருந்திருக்கவில்லை' என கூறியுள்ள தமிழக முதல்வர், பிரச்சார செயலாளராக நியமிக்கபப்ட்டதிலிருந்து அவரை நேரடியாக ஒவ்வொரு நாளும் மதிய நேர உணவு இடைவேளையின் போதும், இரவுணவு நேரத்தின் போதும் சந்தித்து வந்ததாகவும், கலந்துரையாடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கருணாநிதி விடுத்த அறிக்கையில், கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றில் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கலந்து கொண்டிருந்ததாகவும், அப்போது அந்நிகழ்வு தொடர்பில் எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் கொடுத்து கமல் பத்திரிகை விளம்பரம் செய்யாமல் விட்டுவிட்டதாக குற்றம் சுமத்தி எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்ததாகவும், அப்போதிருந்தே கமல் மீதான பகைமை நீடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை நாளை வட இந்தியாவில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக இருப்பதால், புரோமோ நடவடிக்கைகளுக்காக இன்று மும்பை செல்கிறார் கமல்ஹாசன். செல்லும் முன்னர் விமான நிலையத்தில் பேட்டி அளிக்கையில், தமிழக அரசு மீது இன்னமும் நம்பிக்கை இருப்பதாகவும், உச்சநீதிமன்றத்திற்கு நாடும் முடிவை சற்று தள்ளிவைப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இஸ்லாமிய நண்பர்களுடன் பேசியிருப்பதாகவும், குர்ரான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட இணங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்பதிவுகளையும் வாசித்துச்செல்க :
- சிவாஜியும் நடிச்சிருக்கார் விஸ்வரூபத்தில்!
- விஸ்வரூபம் : தவறுகள்
- 'தடை தொடரும்' : நீதிமன்றம், 'சில காட்சிகளை நீக்கத் தயார்' : கமல்ஹாசன்
- விஸ்வரூபம் மீதான தடை ஏற்க முடியாது : மத்திய தணிக்கை குழு தலைவி
4tamilmedia THANKS
No comments:
Post a Comment