Saturday, 19 January 2013 11:53

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜெய்பூரில் நடைபெற்று வரும் 'சிந்தனை அமர்வு' இரண்டாவது நாள் காங்கிரஸ் மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் ஜோதிராதித்யா ஷ்கிந்தியா, ராஜீவ் சுக்லா, ஜிதின் பிரசதா, மற்றும் மூத்த அமைச்சர் மனிஷங்கர் ஐயர் ஆகியோர் ராகுலை பிரதமர் வேட்பாளருக்கு முன்நிறுத்த வேண்டுமெனவும், இந்தியா இளம் தலைமுறையினரால் புதிய இந்தியாவாக மாற்றம் அடைந்து வருவதால் இளம் தலைவர் ஒருவரே பிரதமர் பதவிக்கு தேவை எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதே போன்று காங்கிரஸ் தலைவர்கள் ராஜ் பபார், சஞ்சேய் நிருபம் ஆகியோரும் ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடித்துள்ளனர். அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவிக்கையில், ராகுல் ஏற்கனவே ஒரு தலைவர் தான். அவரை போன்று நிலையான தலைவர்கள் பலர் காங்கிரஸில் இருக்கிறார்கள். அதற்காக நாம் பெருமையடைகிறோம் என்றார்.
அமைச்சர் ராஜீவ் சுக்லா கருத்து தெரிவிக்கையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரே இது தொடர்பில் முடிவெடுக்க வேண்டும். நாம் கோரிக்கை மாத்திரமே முன்வைக்க முடியும் என்றார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விரிவுபடுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இது பற்றி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கருத்து தெரிவிக்கையில், தேர்தலை கூட்டணி கட்சிகள் இல்லாமல் சந்திப்பது சாத்தியமில்லை. இரு வகையான கூட்டனிகளை அமைக்க முடியும். ஒன்று தேர்தலுக்கு முந்தையது. மற்றையது தேர்தலுக்கு பின் அமைவது. தேர்தலுக்கு பின் போதிய அளவு வெற்றி கிடைக்காவிட்டால், புதிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவரலாம் என்றார்.
இதேவேளை ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒரு சில தலைவர்கள் எதிர்ப்பும் வெளியிட்டு வருகின்றனர். மோடியின் வேகத்திற்கும், பேச்சுக்கும் ராகுலால் ஈடுகொடுக்க முடியுமா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
4tamilmedia thanks
No comments:
Post a Comment