ஜனவரி 28, 2013 at 9:20:48 AM
மாணவர்களற்ற அரசுப் பள்ளிகள்: குழந்தைகள் கல்வி உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமகல்வி இயக்கம், தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 100 பள்ளிகளில் முதற்கட்டமாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் 65 பள்ளிகளில் நான்கிற்கும் குறைவான மாணவர்களே அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்ததாகக் கூறுகின்றனர் சம கல்வி இயக்கத்தினர்.
இதற்கு முக்கியக் காரணம், ஒரு பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளோ, கல்வித் தரமோ இல்லாதது தான் என்கின்றனர் ஆய்வை மேற்கொண்டவர்கள். அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி திறக்கப்பட்டால் உடனே அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடுவதாகவும் ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்.
அடிப்படைகளின்றி பல அரசுப் பள்ளிகள்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒரு மாணவன் கூட இல்லாத அவலமும் நிலவுவதாக தெரிவிக்கின்றனர் சம கல்வி இயக்கத்தினர். சமீபத்தில் புதிதாக 21 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது ஆய்வு மேற்கொண்ட இயக்கம். அதேநேரத்தில், மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளோ அரசுப் பள்ளிகளின் நிலையை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
தடுக்கமுடியாத படையெடுப்பு: ஒரு புறம், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க ஆங்கில வழிக்கல்வி போன்ற முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது. இருந்தும், சில முக்கியக் குறைபாடுகள் தொடர்ந்து தீர்க்கப்படாமலே இருப்பதால், தனியார் பள்ளிகளை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு தடுக்கமுடியாமலிருப்பதை பிரதிபலிக்கிறது இந்த ஆய்வு.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment