3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013,
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர்.
இவருடைய மனைவி ஜரினா (வயது 35). இவர்களுக்கு ஜகருல்லா (5) என்ற மகனும், கிஸ்மத் (2 1/2), யாஷ்மின் (1 1/2) என்ற 2 மகள்களும் இருந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு இஸ்மாயில் இறந்து விட்டார்.
அதன்பிறகு ஜரினா, தனது மகன், மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (38), பானிபூரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
தொழில் விஷயமாக வந்தவாசிக்கு வந்த அருளுக்கு, ஜரினாவுடன் பழக்கம் ஏற்பட்டது. கணவனை இழந்து கைக்குழந்தைகளுடன் தவிக்கும் ஜரினா மற்றும் அவரது குழந்தைகளை அருள் குப்பையநல்லூர் கிராமத்துக்கு அழைத்து வந்து கணவன்-மனைவி போல் குடித்தனம் நடத்தினார். நேற்று காலை அருளுக்கும், ஜரினாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜரினா, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மதியம் 3 மணியளவில் 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள நீரடி கிராமத்தில் வயல் வெளியில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.
அங்கு மனதை கல்லாக்கிக்கொண்டு தனது பிள்ளைகள் 3 பேரையும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் தள்ளி கொலை செய்தார். அதன்பிறகு தானும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து, ஜரினாவை உயிருடன் கிணற்றின் மேலே தூக்கி வந்தனர்.
ஆனால் அவரது 3 குழந்தைகளும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டன. இதுபற்றி உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மிதந்த 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து ஜரினா, எதற்காக தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றார்? அருள் எங்கு சென்றார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment