புதுடெல்லி: இந்தியா
- சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த 4வது கட்ட பேச்சுவார்த்தையில்
சுமுக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்திய எல்லையில் ஊடுருவி இருந்த சீன
படைகள் உடனடியாக வெளியேறியது. இதனால் கடந்த 4 வாரங்களாக ஏற்பட்டிருந்த
பதற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்குள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன
ராணுவம் அத்துமீறி நுழைந்ததோடு, இந்திய எல்லைக்குள் 19 கிலோ மீட்டர்
தூரத்திற்கு நுழைந்து முகாம் அமைத்தது. 5 கூடாரங்கள் அமைக்கப்பட்டு 50
ராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர். சீனாவின் இந்தி ஊடுருவல் இந்தியாயை
அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த பிரச்னை தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஏற்கனவே 3 முறை கூடி
பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், எந்த சுமுக முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் 4வது கட்டமாக சூசுல்லில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும்
பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரிகேடியர் அந்தஸ்து அதிகாரிகள் கலந்து
கொண்டனர். 45 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில் சுமுக முடிவு
எடுக்கப்பட்டது.
சீன ராணுவம் தரப்பில் கூறுகையில், இந்திய ராணுவம் சீன எல்லைக்குள் 300
மீட்டர் தூரத்திற்கு ஊடுருவி முகாம் அமைத்து உள்ளது. எங்களை வெளியேறும்படி
கூறும் முன்னர், இந்தியா தனது படைகளை சீன எல்லையில் இருந்து திரும்பப் பெற
வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
இந்தியா தரப்பில் கூறும்போது, இருதரப்பினரும் ஒரே சமயத்தில் படைகளை
திரும்பப்பெறலாம் என்றும் கூறியது. இதனை சீனா ஏற்றுக் கொண்டது. இந்த
பேச்சுவார்த்தை விவரங்கள் இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கும்
தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு 7.30 மணிக்கு சீனா தனது படைகளை லடாக் பகுதியில்
இருந்து திரும்ப பெற்றுக் கொண்டது. அதேநேரத்தில் சீனா கூறிய பகுதியில்
இருந்து இந்திய ராணுவமும் திரும்ப பெறப்பட்டது. இதன் மூலம் கடந்த 4
வாரங்களாக ஏற்பட்டிருந்த பதற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment