பந்த் தொடர்பான கேள்விக்கு நிருபர் மீது சீறிப்பாய்ந்த மம்தா பானர்ஜி
[ வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013,
அகில
இந்திய 2 நாள் வேலை நிறுத்தத்தையடுத்து மேற்கு வங்காள மாநிலத்தில் பல கடைகள் நேற்று
அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் முதல் மந்திரி மம்தா பானர்ஜ் நேற்றைய பந்த்
குறித்து பேட்டியளிக்க கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்கள்
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது பேசிய அவர், ”கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த வேலை
நிறுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது. தொழில் நிறுவனங்கள், கடைகள் எல்லாம்
திறக்கப்பட்டுள்ளன' என்று கூறினார்.
அவரது கருத்தை மறுத்த நிருபர் ஒருவர், ”நான் பார்த்த பல பகுதிகளில் கடைகள்
மூடிக் கிடக்கிறதே” என்று எதிர் கேள்வி கேட்டார். ”நீங்கள் மார்க்கெட்டின் உள்ளே
சென்று பார்த்தால் நிலைமை தெரியும். கடைகளை காலையில் மூடி வைத்திருந்தவர்கள் கூட
அதன் பின்னர் திறந்து விட்டார்கள். எல்லா கடைகளும் திறந்தே இருக்கின்றன” என மம்தா
பானர்ஜி ஆவேசமாக மறுத்தார்.
உடனடியாக, ”நீங்கள் எந்த பத்திரிகையின் சார்பாக வந்திருக்கிறீர்கள்?” என அந்த
நிருபரை பார்த்து மம்தா பானர்ஜி கோபமாக கேட்டார். தனது பத்திரிகையின் பெயரை அவர்
கூறியதும் மேலும் கோபமடைந்த மம்தா பானர்ஜி, ”அது தான். அதுதானே பார்த்தேன். நீங்கள்
இங்கே அரசியல் செய்வதற்காகவா வந்திருக்கிறீர்கள்? உங்கள் எல்லையை நீங்கள்
மீறுகிறீர்கள். உங்கள் பத்திரிகையில் நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், நான்
பேசும் போது பொறுமையாக இருக்க வேண்டும். இதற்காகதான் பத்திரிகையாளர்களை சந்திப்பதை
நான் தவிர்த்து வருகிறேன். உங்கள் கருத்துகளை பத்திரிகையின் மூலம் தெரிவிப்பதாக
கூறிக்கொண்டு ஒவ்வொரு நாளும் என்னைத் தாக்கி எழுதுகிறீர்கள், இருந்தாலும் எனது
பேட்டிகளின் போது உங்களை உள்ளே வரக்கூடாது என நான் தடுத்திருக்கிறேனா? அல்லது
உங்களைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறேனா?” என்று கூறியபடி பேட்டியை
முடித்துக்கொண்டு வேகமாக வெளியேறினார் மம்தா பானர்ஜி.
சில தினங்களுக்கு முன்னர், ”பத்திரிகையாளர்கள் எல்லாம் நாகரிகம் இல்லாதவர்கள்.
ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விட்டால் நாகரிகம் தானாக வந்துவிடும்” என ஒரு நிருபரை
மிரட்டும் பாணியில் மம்தா பானர்ஜி கூறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment