Friday, 19 April 2013 10:01

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பில்லை எனவும், அப்போதைய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற கூட்டுக்குழு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணையை ஆ.ராசா தவறாக வழிநடத்தியதாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தணிக்கை குழு கூறியது போன்று ரூ.1.76 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்படவில்லை எனவும் வரைவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இந்த நாடாளுமன்ற கூட்டுக்குழு வரைவு அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை 2ஜி விவகாரத்திலிருந்து காப்பாற்றும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கொவன், இந்த அறிக்கையை ஏற்கவே முடியாது என தெரிவித்துள்ளார். ராசாவின் கோரிக்கையின் படி நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் அவர் சாட்சியமளித்த பின்னரே இதன் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த உறுப்பினர் பி.சி.சாக்கோ தலைமையில் இந்நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அலைக்கற்றை விவகாரம் தொடர்பில் இதுவரை 56 முறை கூடி பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வந்தது.
தான் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க விரும்புவதாக ஆ.ராசா கோரிக்கை விடுத்த போதும் அதை சாக்கோ நிராகரித்ததுடன், எழுத்து பூர்வமாக பதில் அளிக்குமாறு கோரி ஐந்து கேள்விகளை சாகோ அனுப்பி வைத்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள ஆ.ராசா, தான் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எடுத்த முடிவுகள் பிரதமர், நிதி அமைச்சருக்கு தெரிந்தே நடைபெற்றிருக்கிறது என்பதை நிரூபிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோரியிருந்தார். அந்த கோரிக்கையை சாக்கோ மீண்டும் நிராகரித்தார்.
இந்நிலையிலேயே, தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இவ்விகராத்தில் பிரதமர், நிதி அமைச்சருக்கு தொடர்பில்லை என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் 25ம் திகதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படவிருக்கிறது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment