சமூக பார்வை
இன வேறுபாடின்றி பல மொழி பேசும் மக்கள் வாழும் மதசார்பற்ற நாடு இந்தியா என்றால் அது மிகையாகாது. நாம் வாழும் இச்சமுதாயத்தில் தொழில் நுட்பங்களும், வாழ்வியல் சார்ந்த மாற்றங்களும் வெகு விரைவில் முன்னேறிக்கொண்டிருக்கின்றது. இந்த முன்னேற்றத்திற்கு இடையில் சில மனிதர்கள் இச்சமூகத்தின் பார்வையில் இன்றும் இன்னலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது.
தன்னம்பிக்கையுடன் வாழும் ஊனமுற்றோர்களை இச்சமூகம் முழுமையாக அங்கீகரிக்காமல், சற்று தள்ளி வைத்தே தான் பார்க்கின்றது. சாதாரண மனிதர்களை விட ஊனமுற்றோர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த தினம் தினம் பெரும் சவால்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் சமூகத்தின் எதிரொலியாய் ஊனமுற்றோர் ஒருவரின் பதிவினை பார்ப்போம்.
01. உங்களுடைய பெயர்? இந்த நிலைமைக்கு காரணம்?
என்னுடைய பெயர் கந்தசாமி, வயது 50, பிறவி ஊனம் கிடையாது. மற்றவர்களை போன்று நானும் இரண்டு கைகளுடன் தான் பிறந்தேன் வளர்ந்தேன். நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது தான் இந்த துயர சம்பவம் என் வாழ்வில் ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்யும் போது தவறுதலாக கால் தடுமாறி ரயிலிற்கு அடியில் சிக்கிக்கொண்டேன். அதில் எனது இரண்டு கைகளும் முழுமையாக சிதைவடைந்து நீக்கப்பட்டன.
02. கைகளை இழந்த பின்னர் உங்கள் வாலிப காலம் எவ்வாறு இருந்தது?
கைகளை இழந்த பின்னர் மிகவும் துயரமாக இருந்தது. எனது பெற்றோர் தான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். என்னுடைய பழகிய நண்பர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் இந்த விபத்திற்கு பிறகு என்னை சற்று வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தனர். சிலர் என்னை மிகவும் கேலி செய்தனர். என்னுடைய சொந்த வேலைகளை கூட யாருடைய துணையும் இன்றி செய்யமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். சிலர் என்னை மிகவும் உதாசினப்படுத்தினர்.
03. உங்களுடைய திருமண வாழ்க்கை பற்றி?
என்னுடைய மனைவி பெயர் உமா. என்னுடைய ஊனம் முழுமையாக தெரிந்து தான் திருமணம் செய்தார்கள். என்னுடைய பெற்றோருக்கு பிறகு என்னுடைய மனைவி தான் என்னை மிகவும் அக்கறையோடு கவனித்து வருகின்றார். திருமணம் நடைபெற்ற ஆரம்பத்தில் அநேகர் எங்களை காதுபட மிகவும் கேவலமாக பேசினர். இச்சமுதாயம் வார்த்தைகளால் எங்களை மிகவும் வேதனைப்படுத்தியது. வருமானத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். விழாக்கள், பொதுநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது எனது மகளுக்கு திருமணம் வைத்துள்ளோம். போதிய பொருளாதார வசதி இல்லை, முடிந்தவர்கள் உதவிசெய்யுங்கள்.
04. சமுதாயத்தின் பார்வையில் நீங்கள் எப்படி நடத்தப்படுகின்றீர்?
அரசாங்கம் ஊனமுற்றோர் என்பதற்கான எந்த சலுகையும், உதவியும் எங்களுக்கு வழங்கவில்லை. என்னுடைய மனைவி சிறு தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிதான் உள்ளோம். கலெக்டருக்கு பலமுறை மனு கொடுத்துள்ளோம். உதவிக்காக அரசாங்கத்தின் அனைத்து அலுவலகத்திற்கும் ஏறி இறங்கியுள்ளோம். ஆனால் இது வரை எந்த பலனும் இல்லை. சமுதாயத்தின் பார்வையில் மிகவும் பின்தங்கி உள்ளோம். சில நேரங்களில் மக்கள் என்னை மிகவும் பரிதாபமாக பார்க்கின்றனர், சில நேரங்களில் ஏலனமாக மிகவும் குறைந்து மதிப்பிடுகின்றனர்.
நான் ஒன்று கேட்க விரும்புகின்றேன்....பிறவி ஊனமோ, விபத்தால் வரும் ஊனமோ இந்த இரண்டுமே எங்கள் தவறு கிடையாது. நாங்களும் மற்ற மனிதர்களை போன்றுதான் கடவுளால் படைக்கப்பட்டுள்ளோம். எங்களை மதிக்காவிட்டாலும் பராவாயில்லை, ஆனால் தயவு செய்து ஏளனமாகவோ அல்லது விஷமான வார்த்தைகளை பேசி எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள்.
தொடர்புகளுக்கு-094882 36504
newindianews thanks
No comments:
Post a Comment