: 24 June 2013
- உத்தரகண்ட் மாநிலத்தில் கோவிந்தகாட் பகுதியில் சீறிப் பாயும் நதியின் குறுக்கே இந்திய-திபெத்திய எல்லை காவல் படையினர் அமைத்த மீட்புக் கயிறு மூலம் மறுகரை அடையும் யாத்ரிகரும் சிறுவனும்.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பெய்த கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இது குறித்து உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் யஷ்பால் ஆர்யா, டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
பிரளயம் போன்ற இந்தப் பேரழிவால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேதாரநாத் பள்ளத்தாக்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், குறைந்தது 5,000 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குவிந்திருக்கும் இடிபாடுகளுக்கு அடியில் உள்ள உடல்களை மீட்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. அந்தப் பணி தொடங்க சிறிது காலம் பிடிக்கும் என்றார் யஷ்பால்ஆர்யா. எனினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்த சரியான எண்ணிக்கையை அவரால் வழங்க இயலவில்லை.
இதனிடையே, கேதாரநாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புனிதத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான யாத்ரிகர்கள் வெள்ளத்துக்கு நடுவே சிக்கியுள்ளனர். ராணுவம், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள், 40 ஹெலிகாப்டர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 80 ஆயிரம் யாத்ரிகர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் லேசாக மழை பெய்ததால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மழை நின்றதால் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய-திபெத் எல்லைப்புற காவல் படை டிஐஜி அமித் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""திங்கள்கிழமை மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஹெலிகாப்டர் மூலம் யாத்ரிகர்களை மீட்கும் பணி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக பத்ரிநாத் பகுதியில் 200 வீரர்கள் நடைபாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.
பத்ரிநாத்தில் மீட்புப் பணி: கேதாரநாத் பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடிந்து விட்டது. பத்ரிநாத் உள்பட மூன்று பகுதிகளில் சுமார் 19,000 பேர் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிகப்பெரிய மீட்புப் பணி: விமானப்படை அதிகாரி ராஜேஷ் இஸர் கூறியது: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானப்படைக்குச் சொந்தமான 30 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானப் படை வரலாற்றில், ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மீட்புப் பணி இதுதான். மீட்புப் பணி முடிய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றார்.
நிவாரண நிதிக்கு பிரணாப் ஒரு மாத சம்பளம்: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது ஒரு மாத ஊதியத்தை (ரூ.1.5 லட்சம்) வழங்குவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அசாம் அரசு ரூ.1 கோடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக் ரூ.1 கோடி வழங்கப்படும் என அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய் உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவிடம் கூறியுள்ளார்.
திபெத் நிர்வாகம் ரூ.3 லட்சம் உதவி: நிவாரணப் பணிகளுக்காக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குவதாக மத்திய திபெத் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீண்டகால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் நீண்டகால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி கூறியுள்ளார். முன்னதாக, வெள்ளம் பாதித்த பகுதிகளை சோனி பார்வையிட்டார். அவருடன் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோராவும், ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவும் சென்றிருந்தனர்.
மீட்புப் பணிகள் முடிய இரு வாரங்களாகும்
மாநில முதல்வர் விஜய் பகுகுணா கூறுகையில், ""சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தில் சிக்கியவர்கள் அனைவரையும் மீட்பதற்கு இன்னும் 15 நாள்கள் ஆகும். அதேநேரம், ஆங்காங்கே சிக்கி உள்ளவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை. வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. புனிதத் தலமான கேதாரநாத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த 2 ஆண்டுகளுக்கு கேதாரநாத் கோவில் மூடப்பட்டிருக்கும். மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் புதுப்பிப்பதற்கு நீண்ட காலம் ஆகும்'' என்றார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பின்னர் மாநில முதல்வர் பகுகுணாவை சந்தித்துப் பேசினார். அப்போது, மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
dinamani thanks
No comments:
Post a Comment