சென்னை, ஜூன்.5 - டெல்லியில் இன்று நடைபெறும் முதல்வர்கள் மாநாடு ஓர் ஆண்டுச் சடங்கு போலவே தெரிகிறது. மாநாட்டில் பேச உரிய நேரம் கிடைக்காது என்பதால் அம்மாநாட்டிற்கு எனது சார்பில் மூத்த அமைச்சர் கே.பி.முனுசாமியை அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளேன். மாநாட்டில் வாசிக்கப்படும் எனது உரையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளேன் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.உள்துறைப் பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்கள் கருத்தரங்கு அவசியமே என்றாலும், தனது அனுபவத்தில் அத்தகைய கருத்தரங்குகள் வெறும் சடங்கு சம்பிரதாயத்துக்காக மத்திய அரசால் நடத்தப்படுவதாகவே தோன்றுகிறது என்றும் முதலமைச்சர்கள் தங்கள் தரப்பு கருத்தை வெளிப்படுத்த மிகக் குறைந்த வாய்ப்பே வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தங்கள் தலைமையின் கீழ் 5.6.2013 ஆம் நாளன்று நடைபெறவிருக்கும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ் மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து எனக்கு வரப்பெற்றுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வு என்பதில் ஐயமேதுமில்லை. அதிலும் இது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் மாநில அரசுகளின் தலையாய பணி தொடர்பானதாகும்.
இருப்பினும், மத்திய அரசால் நடத்தப்படும் இந்த மாநாடு ஓர் ஆண்டுச் சடங்கு போல நடந்து வருகிறது. மேலும், இந்த மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆய்வுக் குறிப்புகள் குறித்து, மாநில முதலமைச்சர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிகமிகக் குறைவான கால அவகாசம் / வாய்ப்பு அளிக்கப்படுகிறது எனது அனுபவத்தில் கண்டதாகும். தற்போது நடக்கவிருக்கும் இந்த மாநாட்டிலும் 12 விவகாரங்கள் அடங்கிய மிக நீண்ட முக்கிய ஆய்வுக் குறிப்புகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதற்கான தலைப்புகள் பற்றி தெரிவிக்கவே குறைந்தது 10 நிமிடங்களாவது பிடிக்கும். துரதிருஷ்டவசமாக மாநில முதலமைச்சர்கள் அவர்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கும் இதே கால அவகாசம்தான் அளிக்கப்படுகிறது. மாநில அரசுகளின் முதலமைச்சர்கள் மக்களால் மக்களாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், மத்திய அரசின் நிர்வாகத்தில் நாங்களும் சமபங்கு கூட்டாளிகளாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. இம்மாநாட்டில் நடத்தப்படும் விவாதங்களில் எங்களுடைய பங்கும் நிறைவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இங்கு உள்ளது. அப்போதுதான் மாநிலங்களின் உண்மையான நிலையை மத்திய அரசுக்கு எங்களால் எடுத்துரைக்க இயலும். மத்திய அரசின் தற்போதைய இத்தகைய நிலைப்பாட்டினால், முக்கிய விவகாரங்கள் குறித்த முதலமைச்சர்களுடனான இதுபோன்ற மாநாடுகள் ஓர் நடைமுறை சடங்கு என்ற நிலையில் அதன் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. மேலும், இது ஓர் கலந்தாய்வு கூட்டமாக இல்லாமல், மாநில முதலமைச்சர்களுக்கு, அவர்கள் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு அளிக்கப்படும் காலவரையறை குறைவான அளவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசுக்கும் சமமான பொறுப்பு கொண்டவர்கள். மத்திய அரசுடன் சம பங்கைக் கொண்டுள்ள மாநில முதல்வர்கள் இந்தக் கருத்தரங்க விவாதங்களில் தங்கள் தரப்பு பங்களிப்பையும் நிச்சயம் விரும்புவார்கள். ஆனால் அவர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் போல் மத்திய அரசு பயன்படுத்துகிறது.
மாநிலங்களின் கருத்துக்களை போதிய வகையில் கருதிப் பார்க்காமல், மத்திய அரசு முன்னரே தீர்மானித்த சில நடவடிக்கைகளை மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆராயாமல் ஏற்பதற்காக இம்மாநாட்டினை வெறுமனே கூட்டுவதற்கே தற்போது கருதப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், ஆராயமல் முன்னதாக உண்மையென முதலமைச்சர்களை ஏற்றுக்கொள்ளச்செய்வதுடன் அவர்கள் மெத்தனமாக நடத்தப்படுவதும் 27.12.2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலிருந்து தெரிய வருகிறது. இக்கூட்டத்தின் போது, அவமதிக்கும் வகையில் மணியடித்து, கால அளவை காரணம் காட்டி எனது உரையை பாதியிலேயே முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டேன்.
முதலமைச்சர்கள் 10 நிமிடங்களுக்குள் அவர்களுடைய உரைகளை முடித்துவிட்டு அவற்றை அவையில் வெறுமனே முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்குப் பதிலாக, எனது சார்பில் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மாநில அமைச்சரவையின் மூத்த அமைச்சரும் நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கான அமைச்சர் கே.பி.முனுசாமி, உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரை அனுப்பிவைக்கிறேன். அனைத்து ஆய்வுக் குறிப்புகள் மீதான ஆக்கபூர்வமான கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன். இந்த ஆய்வுக் குறிப்புக்களில் பட்டியலிடப்பட்ட அனைத்து விவகாரங்கள் மீதான தமிழ்நாட்டின் விரிவான கருத்துக்களை எனது உரை எடுத்துரைக்கும். மாநாட்டில் எனது உரையை அமைச்சர் வாசிப்பார். இதனை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, டிசம்பரில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தபோது உரிய மரியாதை அளிக்காமல் மணியை அடித்து பேச்சைப் பாதியில் நிறுத்தவைத்ததாகவும். அது மனிதாபிமானமற்ற அணுகுமுறை என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். தனது பேச்சை இடையிலேயே முடித்துக்கொள்ளச் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கூட்டத்திலிருந்து ஜெயலலிதா வெளிநடப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
thinaboomi thanks
No comments:
Post a Comment