குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்வதற்கு விசா வழங்கக்கூடாது என்று, இந்தியாவைச் சேர்ந்த 65 எம்.பி.க்கள், அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
குஜராத் மாநில முதல்–மந்திரியாக, பா.ஜனதாவை சேர்ந்த நரேந்திர மோடி பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவி காலத்தின்போது, கடந்த 2002–ம் ஆண்டில் கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் பயங்கர கலவரம் மூண்டது.
ஏராளமானவர்கள் இந்த கலவரத்தில் பலியானார்கள். அதைத் தொடர்ந்து மனித உரிமைகள் மீறல் அடிப்படையில், நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்வதற்கு அந்த நாட்டு அரசு விசா வழங்க தடை விதித்தது.
இந்த நிலையில், அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் அளவுக்கு, நரேந்திர மோடி கட்சியில் முன்னணி இடத்தைப் பெற்று இருக்கிறார்.
மாறிவரும் அரசியல் சூழ்நிலையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதற்கான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று பா.ஜனதா வற்புறுத்தி வருகிறது. தற்போது பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நியூயார்க் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், நரேந்திர மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி அமெரிக்க எம்.பி.க்களை வற்புறுத்த இருப்பதாக அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்க அரசை வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த 65 எம்.பி.க்கள் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி இருக்கும் தகவல் வெளியானது.
கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் உள்ள ‘இந்திய முஸ்லிம் கவுன்சிலி’ல் உள்ள அந்த கடிதத்தின் நகல், ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 40 மக்களவை எம்.பி.க்களும், 25 மேல்–சபை எம்.பி.க்களும் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மேல்–சபை சுயேச்சை எம்.பி.யான முகமது அதீப் தெரிவித்து இருக்கிறார்.
சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), எம்.பி.அச்சுதன் (இந்திய கம்யூனிஸ்டு), ரஷீத் மசூத் (காங்கிரஸ்), எஸ்.அகமது (திரிணாமுல் காங்கிரஸ்), கே.பி.ராமலிங்கம் (தி.மு.க.), எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோரும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.
ஆனால், அந்த கடிதத்தில் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று, சீதாராம் யெச்சூரி, அச்சுதன் ஆகிய இருவரும் மறுத்து இருக்கிறார்கள்.
அது குறித்து கருத்து தெரிவித்த சீதாராம் யெச்சூரி, ‘‘ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் யாரும் தலையிடுவதை நாங்கள் விரும்புவது இல்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக தீர்வு காண முடியும்’’ என்று தெரிவித்தார்.
ஆனால், இதை ஏற்க மறுத்த முகமது அதீப், அவர்கள் இருவரும் கையெழுத்திட்டதாக உறுதியாக தெரிவித்தார்.
அதிபர் ஒபாமாவிற்கு எழுதப்பட்ட கடிதத்தில், ‘‘குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் மோடி அரசில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள். அவர்கள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்கும் தடையை நீக்குவது சரியாக இருக்காது’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது
thedipaar thanks
No comments:
Post a Comment