எகிப்தில், அதிபர் முகமது மோர்சி தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதை அந்நாட்டு மக்கள் வாண வேடிக்கைகளுடன் கொண்டாடி வருகின்றனர்.
நாட்டை சீர்படுத்துவதற்கு மோர்சி எடுத்த சில நடவடிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வந்தன.
இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். நிலைமையை 48 மணி நேரத்திற்குள் சமாளிக்க வேண்டும் என அரசுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ராணுவம் விதித்த கெடு முடிந்ததையடுத்து பீரங்கி உள்ளிட்ட ராணுவ வாகனங்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டன. இதைத் தொடர்ந்து மோர்சி தலைமையிலான அரசை நீக்கிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
மேலும், மோர்சி ராணுவத்தினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடைக்கால அதிபராக நீடிப்பார் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
இதை ராணுவ தளபதி அப்டெல் பத்தா அல் சிசி, அரசு தொலைக்காட்சியில் அறிவித்தார். இந்த அறிவிப்பை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
எகிப்து நாட்டில் கடந்த 2011 ஆண்டில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மோர்சி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோர்சி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒராண்டு மட்டுமே ஆன நிலையில் தற்போது அவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment