ஆப்பிள் போன்களுக்கான ஐ.ஓ.எஸ். 10
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.10, சென்ற செப்டம்பர் 13 அன்று, மிகப் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு சென்ற ஜூன் மாதம், ஆப்பிள் சிஸ்டங்களுக்கான டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியானது. இந்தப் புதிய பதிப்பு பல புதிய வசதிகளைத் தருவதாய் அமைந்துள்ளது. ஐ.ஓ.எஸ். 9 சிஸ்டத்துடன் புதிய 10 பதிப்பை ஒப்பிட்டால், இந்த பதிப்பில் பல புதிய அதிரடி மாற்றங்கள் இருப்பது தெரிய வரும். குறிப்பாக, முதல் முறையாக, ஆப்பிள் சாதனங்களுக்கு செயலிகளை வடிவமப்பவர்களுக்கு, பல செயலிகளுக்கு இணையான இணைப்புச் செயலிகளை உருவாக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த புதிய இயக்க முறைமை ஐ.ஓ.எஸ். 10ல் தரப்பட்டுள்ள மாற்றங்களை இங்கு காணலாம்.
லாக் ஸ்கிரீன்
இதுவரை ஐபோனின் லாக் ஸ்கிரீன், போனுக்கும் வெளி உலகத்திற்கும் இடையே ஒரு தடையாக இருந்தது. சிஸ்டம் இயங்கிக் கொண்டிருந்தாலும், ரகசிய எண் அல்லது விரல் ரேகை பதிக்காமல், எதனையும் பார்க்க இயலாது. தற்போது, இயங்கிக் கொண்டிருக்கும் செயலிகள் சிலவற்றை வலது பக்கம் விரலால் திரையில் இழுப்பதன் மூலம் பார்க்கலாம். இடது பக்கம் இழுத்தால், கேமரா திறக்கப்படும். கீழாக இழுத்தால், நமக்கான அறிவிப்புகளைக் காணலாம். காட்டப்படும் இவை அனைத்தையும் நம் விருப்பப்படி அமைத்துக் கொள்ளவும் வழி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், லாக் ஸ்கிரீன் ஒரு புதிய இயக்க நிலையைப் பெறுகிறது.
நோட்டிபிகேஷன் அறிய
நோட்டிபிகேஷன் என்னும் அறிவிப்புகள் வந்திருப்பதை அறியவும், அதில் உள்ள செய்தி தகவல்களைப் பெறவும், ஐ.ஓ.எஸ். 10ல் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இனி ஐபோனைத் தூக்கிப் பார்த்தவுடன், இந்த அறிவிப்புகளைக் காணலாம். லாக் ஸ்கிரீனைத் திறந்து தான் பார்க்க வேண்டும் என்பதில்லை. மேலும் அழுத்திச் செயல்படுத்தும் (3D Touch) வசதி கொண்ட போன்களில், இந்த அறிக்கைகளைப் பலவகைகளில் நம் வசப்படுத்திச் செயல்படுத்தலாம்.
திறக்க ஹோம் பட்டன் வேண்டாம்
இதுவரை, ஐபோனின் டச் ஐடி செயலைப் பெற ஹோம் பட்டனை அழுத்திப் பெற்றோம். இனி இது தேவை இல்லை. நம் விரலை கீயின் மீது வைத்தால் போதும். புதியதாக வந்திருக்கும் ஐபோன் 7ல் ஹோம் பட்டனே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய செயல்பாடு வேண்டாம் என எண்ணினால், உங்களால் அதனை மாற்ற இயலும். Settings சென்று, அதனைத் திறக்கவும். பின்னர், General என்பதில் தட்டவும். அங்கிருந்து Accessibility செல்லவும். பின் இங்கு, கீழாகச் சென்று Home Button என்பதைப் பெறவும். இங்கு Rest Finger To Open என்று இருக்கும் ஆப்ஷனைச் செயல்படாமல் செட் செய்திடவும்.
தகவல் அனுப்பும் வழி
ஆப்பிள் சாதனங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுவது மெசேஜ் அனுப்பும் செயலிதான். இந்த முறை, மெசேஜிங் (குறுஞ்செய்தி அனுப்புதல்) அப்ளிகேஷனில் பல புதிய வழிகள் தரப்பட்டுள்ளன. இங்கு கையால் எழுதலாம். பல புதிய தர்ட் பார்ட்டி எமோஜிக்கள், ஸ்டிக்கர் கீ போர்ட் ப்ளக் இன் செயலிகள் கிடைக்கின்றன. சமூக வலைத் தளங்களில் கிடைக்கும் பல வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ‘ஆட்டோ கரெக்ட்’ செயல்பாட்டில், சொற்களுக்குப் பதிலாக எமோஜிக்களைப் போடச் சொல்லி பரிந்துரைகள் கிடைப்பது முற்றிலும் புதிய அனுபவம். அத்துடன் டெவலப்பர்கள் உருவாக்கித் தரும் படங்களையும் இதில் இணைக்கலாம். அசையும் படங்களையும் இணைக்கலாம். விரல்களால் திரையில் எழுதி அனுப்பலாம்.
பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றிற்கு வாழ்த்து செய்தி அனுப்புகையில், அதற்கான விடியோ படங்களை இணைக்கலாம்.
உங்கள் செய்திகளோடு, உங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சியைக் காட்டும் அசை படங்களை இணைக்கலாம். தீப்பந்து, முத்தமிடும் உதடுகள், இதயங்கள் என அசையும் படங்களை இணைக்கலாம்.
ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென தனியே App Store இருப்பதைப் போல, மெசேஜ்களில் பயன்படுத்தக் கூடிய இணைப்புகளுக்காக, ஆப்பிள் நிறுவனம் iMessage Store என்ற ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. தகவல் செய்திகளுக்கான சேர்க்கைகளுக்காகத் தனியே ஸ்டோர் ஒன்றை ஏற்படுத்தி இருப்பது, டிஜிட்டல் உலகில் இதுவே முதல் முறையாகும். இதுவரை செயலிகள் மற்றும் நூல்கள் பெற மட்டுமே தனி ஸ்டோர்கள் இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
‘சிரி’ யின் புதிய விரிவாக்கம்
ஐபோன் 4 எஸ் வெளியான போது, ‘சிரி’ (Siri) எனப்படும் ‘வாய்ஸ் அசிஸ்டண்ட்’ (குரல் வழி கட்டளைகளை ஏற்றுச் செயல்படுத்தும் செயலி) அறிமுகமானது. ஆப்பிள் நிறுவன சாதனங்களில் மட்டுமே இது பயன்பட்டு வந்தது. டெவலப்பர்கள் யாரும் இதனை, அவர்கள் உருவாக்கும் ஆப்பிள் சாதனங்களுக்கான செயலிகளில் இதனை இணைத்துச் செயல்படுத்த ஆப்பிள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையைத் தற்போது, ஐ.ஓ.எஸ். 10ல், ஆப்பிள் தளர்த்தியுள்ளது. ஆப்பிள் தரும் செயலிகள் மட்டுமின்றி, மற்ற டெவலப்பர்கள் உருவாக்கித் தரும் செயலிகளிலும் இதனை இணைத்து இயக்கலாம். இது ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்காக, செயலிகளை உருவாக்குபவர்களுக்கு அளவு கடந்த உற்சாகத்தினையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. தாங்கள் உருவாக்கும் செயலிகளையும் இனி குரல் வழி கட்டளைக்குச் செயல்படும் வகையில் அவர்கள் அமைக்க முயற்சிப்பார்கள்.
புத்தாக்கம் பெற்ற ஆப்பிள் மேப்
ஐ.ஓ.எஸ்.10ல், மேப்கள் புத்தாக்கம் பெற்றுள்ளன. இவை மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவும் டெவலப்பர்கள் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை உருவாக்க வழங்கப்பட்டுள்ளது. மேப்பினைப் பயன்படுத்தி நேராகவே வாடகைக் கார்களைப் பதிவு செய்திடலாம். நாம் அடிக்கடி செல்லும் பயணப் பாதைகளை, ஐ.ஓ.எஸ். 10 மேப் நினைவில் கொள்கிறது. அந்தப் பாதையில் இயங்கும் பெட்ரோல் பங்குகள், உணவு மையங்கள், காபி கடைகள் ஆகியவற்றை நினைவு படுத்துகிறது. இங்கு சென்றால், உங்கள் பயண நேரம் எந்த அளவிற்கு நீட்டிக்கப்படும் என்று காட்டுகிறது.
போட்டோ நினைவுகள்
பேஸ்புக் இல்லாமலேயே நாம் நம் போட்டோக்கள் குறித்த நினைவுகளில் மூழ்கலாம். ஏதேனும் ஒரு தேதியில் தட்டினால், அன்று எடுத்த போட்டோக்கள் அனைத்தும் காட்டப்படும். இந்த அப்ளிகேஷன் அத்துடன் நிற்பதில்லை. அந்த போட்டோக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து சிறிய விடியோ ஆகத் தருகிறது. விருந்து நிகழ்வுகள், திருமணம், பிறந்த நாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை ஒரு போட்டோ ஸ்ட்ரீம் போல அமைக்கலாம்.
தொடர் செயலிகளின் செயல்பாடு
Widgets எனப்படும் தொடர் செயலிகளின் செயல்பாடு செம்மைப் படுத்தப்பட்டுள்ளது. மேலிருந்து கீழாகத் திரையில் இழுத்தால், அன்றைய திரை காட்டப்படும். ஆனால், அது நேற்றைய நிலை ஆகும். இப்போது தொடர் செயலிகளுக்கான திரையை இழுத்தால், அன்றைய நிகழ்வுக்கான திரையாகக் காட்டப்படுகிறது. அவை அனைத்தையும் நம் வசப்படி அமைத்துக் கொள்ள முடிகிறது. புதிய தொடர் செயலிகளை இணைத்துக் கொள்ளலாம், நீக்கலாம். அவை திரையில் எந்த இடத்தில் காட்டப்பட வேண்டும் என இடம் மாற்றி அமைக்கலாம். ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் உள்ள ‘கூகுள் நவ் கார்ட்ஸ்’ போல இவை செயல்படுகின்றன. பழைய Today தோற்றத்தைக் காட்டிலும், கருமமே கண்ணாக இவை உள்ளன.
மூன்று வகை அழுத்த நிலை
ஐபோன் 6 எஸ் போனில் 3D touch என்னும் மூன்று வகை அழுத்த நிலை செயல்பாடு அவ்வளவாகப் பயன் இன்றி இருந்தது. அதனைப் பலர் பயன்படுத்துவதே இல்லை. ஐபோன் 7 இந்த ஏமாற்றத்தைத் தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இதன் பயன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த அளவிற்கு இதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. லாக் ஸ்கிரீனை விட்டு வெளியே செல்லாமலேயே, நமக்கு வரும் நோட்டிபிகேஷன்களை இயக்கலாம். போட்டோக்களைப் பார்வையிடலாம், விடியோக்களை இயக்கிக் காணலாம். வரும் தகவல்களுக்குப் பதில் அளிக்கலாம். வந்த அனைத்து நோட்டிபிகேஷன்களையும் ஒரு தடவை தட்டுவதன் மூலம் நீக்கிவிடலாம்.
ஏதேனும் அப்ளிகேஷன் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில் அதில் அழுத்தி தற்காலிகமாக தரவிறக்கத்தை நிறுத்தி வைக்கலாம். அல்லது அதனை ரத்து செய்திடலாம். இந்த வகையில் எந்த ஒரு அப்ளிகேஷனும் 3D touch செயல்பாட்டினை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறது. போல்டர் ஒன்றில் அழுத்துவதன் மூலம் அதன் பெயரை மாற்றலாம். போல்டரின் உள்ளே இருப்பவற்றைப் பெற்று செயல்படுத்துவதிலும் 3D touch செயல்பாடு கை கொடுக்கிறது. இதே போல பல செயலிகளில் இதன் தாக்கம் பற்றிக் கூறலாம். அனைத்தும் அறிந்து கொள்ள http://www.macrumors.com/2016/06/22/3d-touch-in-ios-10/ என்ற முகவரியில் உள்ள இணைய தளப் பக்கத்தினைக் காணவும். அதில் உள்ள விடியோ படம் இதற்கு உதவுகிறது.
ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் ஹோம் ஆகிறது
ஆப்பிள் இந்த சிஸ்டத்தில் Home என்னும் அப்ளிகேஷனை இணைத்துள்ளது. நாம் வீட்டில் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் (ஸ்மார்ட் போன் உட்பட) சாதனங்களையும், ஐபோனில் இருந்து கட்டுப்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் மூலம், 4th-generation Apple T ஒன்றை, வீட்டில் நாம் இல்லாதபோது, சாதனங்களைக் கட்டுப்படுத்தும் மாஸ்டர் கண்ட்ரோல் சாதனமாக மாற்றி அமைக்கலாம்.
இசை மீட்ட ஒரு சாதனம்
வழக்கமாகத் தரப்படும் Music app இப்போது முற்றிலுமாக புதிய வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. Album art பெரியதாக்கப்பட்டுள்ளது. லைப்ரேரியில் உள்ள playlists, artists, albums போன்றவை அனைத்தும் ஒரே டேப்பில் அமைக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் நம்மை Apple Music தளத்திற்கு சந்தாதாரராக மாற்ற முனைவது இதிலிருந்து தெரிகிறது. முன்பு போல வெறும் மீடியா பிளேயராக மட்டும் இது இனி இயங்காது. கூடுதலாகப் பல வழிகளைக் கொண்டுள்ளது.
தேவையற்றதை நீக்கலாம்
சிஸ்டத்துடன் தரப்படும் பல அப்ளிகேஷன்களை, பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதை ஆப்பிள் உணர்ந்து, இந்த சிஸ்டத்தில் அவற்றை நீக்கும் வழிமுறையைத் தந்துள்ளது. எடுத்துக் காட்டாக, Home, Stocks, iMovie, Tips, Apple Store, Find Friends போன்ற பல பயனுள்ள அப்ளிகேஷன்களைக் கூடப் பலர், தேவையற்றவையாகக் கருதுகின்றனர். இவற்றை நாம் நீக்க வழி தரப்பட்டுள்ளது.
ஐ,ஓ.எஸ்.10ல் தமிழ் மொழி
ஐ.ஓ.எஸ். 7 ஆம் பதிப்பு முதல் தமிழ், ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே சேர்க்கப்பட்டது. மலேசியாவினைச் சேர்ந்த முத்து நெடுமாறன் இதற்கான கட்டமைப்பினை வழங்கி இருந்தார். தொடர்ந்து தமிழ் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமையில் இடம் பெற்று வருகிறது. ஐ.ஓ.எஸ். 10லும் தமிழ் இடை முகங்களும் தமிழ் எழுத்துகளும் இயல்பாக இயங்குகின்றன. ஐபேட் ப்ரோ சாதனத்துடன் இயங்கும் புளுடூத் கீ போர்டும் தமிழில் உள்ளிட இணைந்து செயல்படுகிறது.
ஐ.ஓ.எஸ். 10ல் ஒரே நேரத்தில், கீ போர்ட் மாற்றாமல், இரண்டு மொழிகளில் உள்ளீடு செய்திடலாம். இது ஒரு புதிய அனைவருக்கும் பயன்படும் வசதியாகும்.
இந்த புதிய ஐ.ஓ.எஸ். 10 சிஸ்டம் எந்த ஆப்பிள் சாதனங்களில் இயங்கும்? நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியான ஐபோன் 5 மற்றும் ஐபேட் 4க்குப் பின்னரும் வெளியான அனைத்து சாதனங்களிலும் இதனைப் பதித்து இயக்கலாம். ஐபோன்களைப் பொறுத்த வரை iPhone 7, iPhone 7 Plus, iPhone 6s,iPhone 6s Plus, iPhone 6, iPhone 6 Plus, iPhone SE, iPhone 5s, iPhone 5c, மற்றும் iPhone 5 ஆகியவை இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ளும். ஐபேட் சாதனத்தைப் பொறுத்த வரை, iPad Pro 12.9-inch, iPad Pro 9.7-inch, iPad Air 2, iPad Air, iPad 4th generation, iPad mini 4, iPad mini 3, மற்றும் iPad mini 2, ஆகிய ஐபேட் சாதனங்களில் ஐ.ஓ.எஸ். 10 இயங்கும். அனைத்திலும் இலவசமாகவே அப்கிரேட் செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு http://www.apple.com/ios/ios-10/ என்ற முகவரியில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளம் செல்லவும்.
news tamiluse thanks
No comments:
Post a Comment