தமிழ்
எம்பிக்களை அவமதிக்கும் வட இந்திய கட்சிகளும், ஊடகங்களும்!
இத்தனை நாட்கள் எப்படியோ… இன்றுதான் தமிழக எம்பிக்களின் சூடு சொரணையை கொஞ்சமாவது இந்திய மேல் சபையில் பார்க்க முடிந்தது.
சபை தொடங்கியதும் அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளே நுழைய, அவரை முற்றுகையிட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள், சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரனின் புகைப்படம் அடங்கிய பதாகையை உயர்த்திக் காட்டி கடும் வாக்குவாதத்தை தொடங்கினர்.
அவர்களை அமைதிப்படுத்த அன்சாரியால் முடியவில்லை. பிற்பகல் வரை சபையை ஒத்தி வைத்தார். ஆனால் அப்படியும் கூட பாராளுமன்றத்தில் தங்கள் பரப்புரையைத் தொடர்ந்தனர் காங்கிரஸ் தவிர்த்த தமிழக எம்பிக்கள். மதியம் 2.30 மணிக்குப் பிறகு அவை தொடர்ந்தபோதும் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தமிழர் விரோதப் போக்கை அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து உரத்த குரலில் பேசினர்.
அப்போது கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி வீரர்களை திரும்ப வரவழைத்த வீரப் பிரதாபத்தை வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பீத்திக் கொண்டிருந்தார்.
இப்போது திமுக எம்பிக்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்தனர். அவர்களை அடக்குவதாக நினைத்து, திமிர்த்தனமாக கத்தினார் சபாநாயகர் பொறுப்பை கவனித்த காங்கிரஸின் ரேணுகா சௌத்ரி.
அவ்வளவுதான்… அவரை கிட்டத்தட்ட முற்றுகையிட்டு, அவரது மைக்குகளையும் உடைத்தெறிந்த திமுக, அதிமுக எம்பிக்கள், ‘விலங்குகளைப் போல எங்களை நடத்த முயல வேண்டாம் (You cannot treat us like animals)’ என்று கோஷம் எழுப்பினர். இனியொரு முறை இந்த இருக்கையில் ரேணுகா சவுத்ரி அமரவே கூடாது என அவர்கள் எழுப்பிய முழக்கம், ரேணுகாவை அவையைவிட்டே ஓட வைத்தது. பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் தலையிட்டு சமாதனப்படுத்த முயன்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் எம்பிக்கள் பாராளுமன்றம் முடங்கும்படி போர் முழக்கமிட்டது, வட இந்திய கட்சிகளுக்கு புதிய அனுபவம்தான். தனி ஈழம் அமையும் மட்டும் இந்த போர் முழக்கம் பாராளுமன்றத்தை அதிர வைக்க வேண்டும்.
அது என்னமோ… தமிழ், ஈழம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பற்றிய எந்த ஒரு வார்த்தையையும் மகா எரிச்சலுடன் பார்க்கின்றன(ர்) காங்கிரஸ்- பாஜக-திரிணாமூல் போன்ற கட்சிகளும், கிட்டத்தட்ட 98 சதவீத வட இந்திய ஊடகங்களும்.
தமிழரின் தனித்துவமும், கட்சி உணர்வுகளையும் தாண்டி சில நேரங்களில் எதற்கும் பணிய மறுக்கும் அவர்களின் அடிப்படைக் குணமும் வட மாநில அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக கோஷ்டி சேர்த்தும், ஜால்ரா மட்டுமே தட்டியும் பழக்கப்பட்ட காங்கிரஸ்காரர்களுக்கு பிடிக்காததில் ஆச்சர்யமில்லை.
வட இந்திய மீடியாக்களும் அவர்களின் மனதையே பிரதிபலிக்கின்றன. குறிப்பாக இன்று தமிழக எம்பிக்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்ததை, ‘திமுக, அதிமுக எம்பிக்களின் ரவுடித்தனம்’ என எழுதியுள்ளன. சேனல்காரர்கள் அனைவரும் சொல்லி வைத்த மாதிரி தமிழக எம்பிக்களை (தமிழக எம்பிக்கள் என்றால் அதில் காங்கிரஸ் எம்பிக்கள் சேர்த்தியில்லை என்று புரிந்து கொள்ளவும்!) அவமதிக்கும் வகையிலேயே கமெண்ட் அடித்து வருகின்றன தங்கள் செய்திகளில்.
தலைமீது இடியே இறங்கினாலும், ஜனவரி 26-க்கும் ஆகஸ்ட் 15-க்கும் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என பாடி ஆரஞ்சு மிட்டாய் தின்ற தமிழனை, “இத்தனை எரிச்சலும் வெறுப்பும் கொண்ட உறவு எதற்கு… ஏன் தமிழ் நாட்டின் மீது மட்டும் வலிந்து திணிக்கிறார்கள் இறையாண்மையை? எனது தேசம் எது? நான் இந்தியனா, தமிழனா? தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும்… அது தமிழ்நாடா.. தமிழ் ஈழமா?” என்ற கேள்விகளை, எந்த அரசியல்வாதியின் தூண்டுதலுமின்றி… எந்த பிரச்சார அவசியமும் இன்றி கேட்க வைத்திருப்பது காங்கிரஸ் அரசின் மகத்தான சாதனைதான்!
-என்வழி செய்திகள் thanks
No comments:
Post a Comment