கூடங்குளம் அணுமின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அணுஉலை எதிர்ப்பாளர்கள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.இந்த போராட்டம் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 6-ந்தேதி தள்ளுபடி செய்து அணுமின் நிலையம் செயல்பட அனுமதியளித்தது. இந்த தீர்ப்பை நிராகரிப்பதாக அறிவித்த போராட்டக்குழுவினர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடந்த 9-ந்தேதி இடிந்தகரையில் சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 14-ந்தேதி (அதாவது இன்று) நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடற்கரை கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து அந்தந்த ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன்படி நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே கடலுக்கு செல்லாமல்தான் இருந்து வருகிறார்கள். நாட்டுப் படகு மற்றும் கட்டுமர மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்று வந்த நிலையில் அவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.நெல்லை மாவட்டத்தில் அனைத்து கடற்கரை கிராம மீனவர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டப்புளி இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடிந்தகரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார்.கூடங்குளம் கூத்தங்குளி இடிந்தகரை உவரி கூட்டப்புளி ஆகிய இடங்களில் கடையடைப்பு போராட்டமும் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மற்ற பகுதி மீனவர்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கோவளம் ஆரோக்கியபுரம் சின்ன முட்டம் லீபுரம் வாவாத்துறை ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
tamilantelevision thanks
|
No comments:
Post a Comment