அடக்குமுறையால் பாமகவினைரை ஒடுக்கிவிட முடியாது என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாமகவினர் மீது அறிவிக்கப்படாத அடக்குமுறையை தமிழக அரசு அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு கட்டமாக மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட என்னையும் முன்னூறுக்கும் அதிகமான பாமகவினரையும் கட்சிப் பணி ஆற்ற விடாமல் தடுக்கும்வகையில் ராமநாதபுரத்தில் தங்கி கையெழுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மூலமாக காவல்துறை உத்தரவு பெற்றிருக்கிறது. அனைவரும் வீட்டுச் சிறைகளில் தான் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாமகவினருக்கு எதிரான இந்த அடக்குமுறைகள் கண்டிக்கத்தக்கவை. ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட சூழலை பயன்படுத்திக் கொண்டு வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினரின் ஆதரவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரூந்து களை உடைத்தல் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.காஞ்சிபுரம் வேலூர் விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை பாமகவினரும் பொதுமக்களும் பிடித்து காவல் நிலையங்களில் ஒப்படைத்த பின்னரும் வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களை விடுதலை செய்த காவல் துறையினர் அவர்களுக்குப் பதிலாக அப்பாவி பாமகவினரை கைது செய்து பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.காவல்துறையில் உள்ள சிலரின் துணையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேருந்துகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த உண்மைகள் காவல் துறையினருக்கு தெரிந்திருந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தாக்குதல்களுக்கு எல்லாம் பாமகவினர் தான் காரணம் என்று கூறி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக அரசும் காவல்துறையும் ஈடுபட்டு வருகின்றன. இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment