ஹுஸ்டன், மே. 4-
அமெரிக்காவில் ஹுஸ்டன் நகரில் புஷ் சர்வதேச விமான நிலையம் உள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த ஏ.ஆர்.15 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி 2 தடவை சுட்டார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதற்கிடையே அந்த நபர் அங்குள்ள பாதுகாப்பு சோதனை மையம் அருகே செல்ல முயன்றார். அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் அவரை நோக்கி சுட்டார். ஆனால், அவர் மீது குண்டு பாயவில்லை.
இதற்கிடையே அந்த நபர் தன்னிடம் இருந்த மற்றொரு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டார். இதனால் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து ஹுஸ்டன் விமான நிலையத்தில் அனைத்து முனையங்களும் மூடப்பட்டன. தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. ஹுஸ்டனுக்கு வந்த விமானங்கள் அப்படியே திருப்பி அனுப்பபட்டன.
இதற்கிடையே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவரது பெயர் மற்றும் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment