மரக்காணம் வன்முறையில் அரசு பஸ்கள் சேதம். ரூ.50 கோடி பாமகவிடம் வசூலிக்க தமிழக அரசு திட்டம்.
மரக்காணம் வன்முறையில் பேருந்து உள்பட அரசு சொத்துக்களை சேதம் விளைவித்தது தொடர்பாக பா.ம.க.விடம் இருந்து ரூ.50 கோடி அபராதமாக வசூலிக்க தமிழக வருவாய்த்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி பா.ம.க. சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பங்கேற்க வந்த பா.ம.க.வினர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்போது, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில், பல வீடுகள் எரிக்கப்பட்டதோடு, அரசு, தனியார் பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இதனிடையே, விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தமிழக முழுவதும் பா.ம.க.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் அரசு பேருந்துகள், சாலைகள், மரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க.வினரின் வன்முறையில் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை பா.ம.க.விடம் இருந்து வசூலிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பா.ம.க.விடம் இருந்து 50 கோடி ரூபாய் அபராத தொகையாக வசூலிக்க தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த அபராத தொகையை பா.ம.க. கொடுக்குமா? அல்லது நீதிமன்றத்தை அணுகுமா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment