டேராடூன்: மழை வெள்ளத்தினால் புரட்டி போடப்பட்ட உத்தரகாண்டில், வருகிற திங்கட்கிழமை முதல் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருப்பதால், மீட்பு நடவடிக்கைகளை மாநில அரசு முழு வேகத்தில் தீவிரப்படுத்தி உள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் சுமார் 30,000 பேர் தவித்து வருவதாக மதிப்பிடப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் கனமழை ஆபத்து ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 66,000 பேர் ராணுவ, விமானப்படை மற்றும் துணை ராணுவத்தினர் அடங்கிய மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும், 56 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இவை ஒரு நாளைக்கு 220 முறை பறந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், இதனை 500 தடவையாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகளில் சுமார் 6,200 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹேம்குந்த் என்ற இடத்தில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாகவும், அதே சமயம் பத்ரிநாத்தில் இன்னும் 5,000 முதல் 6,000 பேர் சிக்கி உள்ளதாகவும், ஆனால் கவலைப்பட தேவையில்லை என்றும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிடுவர் என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனமழை காரணமாக மீட்பு இன்னும் 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தகவல் தெரிவித்துள்ள அமைச்சரவை செயலர் அஜித் சேத், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலவும் தற்போதைய நிலைமைகளை விளக்கி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பலி எண்ணிக்கை இதனிடையே உத்தரகாண்டில் பெய்த பேய் மழையின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை சுமார் 500 ஐ தாண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இன்னும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் கதி என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஷிண்டே ஆய்வு
இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளச் சேத பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் நோக்கில் இன்று காலை டேராடூன் வந்த ஷிண்டே, வெள்ளச் சேத பகுதிகளை பார்வையிட்டு, அது தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி சுமார் 40,000 பேர் இன்னும் தவித்து வருவதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 30,000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் சிக்கல் நீடிப்பதாகவும், மீட்புக் குழுவினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதே முதல் பணியாக உள்ளது என்றும், மீட்பு பணிகள் தற்போதுள்ள வேகத்தில் நீடித்தால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி இன்னும் ஓரிரு நாளில் நிறைவடைந்துவிடும் என்றும், அதே சமயம் மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலைதான் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment