வெள்ளிக்கிழமை (19) மஹியங்கனை பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திற்குச் சென்று பிரஸ்தாப மாகாண அமைச்சர்,பள்ளிவாசல் ஸ்தாபக தர்மகர்த்தா சீனி முஹம்மது ஹாஜியாரின் மகன் சப்ரியிடம் பள்ளிவாசலில் தொழுகை நடத்தக் கூடாதென்றும்,அதனை மூடிவிடுமாறும் எச்சரித்துள்ளதாகவும்,அதன் காரணமாக அங்கு ஜூம்ஆத் தொழுகை நடைபெறவில்லையென்றும்,இது முஸ்லிம்களை மனவேதனை அடைச்செய்யும் செயலென்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இதனிடையே, இந்தப் பள்ளிவாசல் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி பிரதேச சபையில் தீவிரவாத கருத்துகளை பரப்பி வருவோர் ஒன்று கூடி தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும்,அடுத்த மாதம் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றிற்கு அவர்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் சில இடங்களில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததினால்,இலங்கையில் சிறுபான்மையினர்களாக வாழும் ஒரு சமூகத்தினரான முஸ்லிம்கள் தமது சன்மார்க்க கடமைகளை இடைஞ்சல்களும் அச்சமும் இன்றி நிம்மதியாக மேற்கொள்வதற்கு இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
சென்றவாரம் நடந்த மஹியங்கனை சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதியுடனும்,அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் தெனுக விதான கமகே உடனும்,பதுளை மாகாண சபை அமைச்சர் அனுர விதான கமகே உடனும்,பொலிஸ் மா அதிபருடனும்,பதுளை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருடனும், மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் நான் தொடர்பு கொண்டு மஹியங்கனையில் முஸ்லிம்கள் வழமை போன்று சமயக் கடமைகளில் ஈடுபடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்,அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமாறும் வேண்டிக்கொண்ட போதிலும்,இந்த வெள்ளிக்கிழமை அங்கு முஸ்லிம்கள் தொழுகையை நடத்த விடாமல் தடுக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது என்றார்.
மஹியங்கனை பள்ளிவாசலில் இருபத்தொரு வருடங்களாக 150க்கும் மேற்பட்டோர் தொழுகையை மேற்கொண்டுவருகிறார்கள்.அந் நகரில் 50க்கும் அதிகமான முஸ்லிம்கள் வர்த்தகம் செய்து வருகிறார்கள்.அவர்களின் பொருளாதார நடவடிக்கைகள் மீது ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியும் இதற்கு ஒரு காரணமெனக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு இங்கு நடைபெறும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தன.இலங்கையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களும் இதில் அதிக கரிசனை கொண்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்
news ..neruppu thanks
No comments:
Post a Comment