எங்கள்
வயல்காட்டுக்கும் அடுத்திருந்த வேலிமுள் காட்டிற்கும் இடையில் ஒரு ஓடை மட்டுமே
உண்டு. அந்த வேலிக் காட்டில்தான் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள்.
நான் அப்போது 4வதோ 5-வதோ படித்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள்
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப் போன என் அப்பா, வேலை முடிந்ததும் சாராயம் குடிக்க
வேலிக்காட்டுக்குள் நுழைந்தார். அப்போது திடீரென போலீஸ் ரெய்டு வந்துவிட்டது.
அடித்துப் பிடித்து ஆளுக்கொரு பக்கம் ஓட்டம் எடுத்தனர். அப்பாவும் ஓடையில் உருண்டு
விழுந்து, அங்கிருந்து போலீஸ் கண்ணில் படாமல் எங்கள் வயலுக்குள் தவழ்ந்தே
நுழைந்தார். பிறகு அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து வரப்பை வெட்டுவதுபோல் பாவ்லா
காட்ட ஆரம்பித்தார். துரத்திவந்த போலீஸும் ‘இவர் யாரோ ஒரு விவசாயி’ என விட்டு
விட்டுப் போய்விட்டனர்.
பிறகு,
கை வைத்த பனியனெல்லாம் கரிசல் மண் கறையுடன் வீடு வந்து சேர்ந்தார். என் அம்மா
கடுப்பாகி திட்டித் தீர்த்தார். ‘அந்த எழவை இப்படிக் குடிக்கணுமா?”என்று கேட்டார்.
பத்து வயதில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பல விஷயங்கள்
புரிந்தது.சட்டத்தின் படியும், சமூகத்தின் பார்வையிலும் குடிப்பது ஒரு தவறான
பழக்கம் என்பது பசுமரத்து ஆணி போல் மனதில் பதிந்தது. அதன்பின் கல்லூரி ஹாஸ்டல்
வாழ்விலும், அயல்நாட்டில் வாழ்ந்த போதும் நான் குடித்ததே இல்லை.
இப்போது
தமிழகத்தில் நடப்பது என்ன? அரசாங்கமே சாராயம் விற்கிறது. போலீஸ் காவல் காக்கிறது.
பிராந்தி விஸ்கி வாங்குவது என்பது பெப்ஸி, கோக் வாங்குவது போல் இயல்பான விஷயமாக
ஆகிவிட்டிருக்கிறது. குடிப்பது குறித்த குற்ற உணர்ச்சியையே இது இல்லாமல்
ஆக்கிவிடுகிறதே..இதனைப் பார்த்து வளர்கின்ற நம் குழந்தைகள் மனதில் குடிப்பழக்கம்
தவறு என்று எப்படிப் படும்?
முன்பெல்லாம் ஒருவன் குடிக்கப் பழக வேண்டுமென்றால் அதற்கான
வாய்ப்பைத் தேடிப் போகவேண்டும். ஆனால் இப்போது நம்மைச் சுற்றிலும் டாஸ்மாக் கடைகள்
இருந்து கொண்டு வா வா என்று அழைக்கின்றன. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள்.
மதுவிற்கு அடிமையாகவே இங்கு வாய்ப்பு அதிகம்.
மதுவிலக்கு கேட்கும்போதெல்லாம் அரசு தரப்பில் சொல்லப்படுவது
கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்பது தான். ஆனால் அரசே மது விற்பதால் நம்
குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்பை விட, கள்ளச் சாராயமே பெட்டர். குறைந்தது
’அது ஒரு தப்பான விஷயம் ’ என்ற உண்மையையாவது அவர்கள் புரிந்து
கொள்வர்.
டாஸ்மாக்கில் மது விற்பதன் மூலம் ஒரு சந்ததியையே
குடிகாரர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம். மக்கள் நலன் அல்ல, வியாபாரம்தான்
முக்கியம் என்றால் அட்லீஸ்ட் மதுபான விலைகளையாவது கூட்டலாமே..ஒரு மினி குவார்ட்டர்
200 ரூபாய் என்று விற்க வேண்டியது தானே?
அரசு
டாஸ்மாக்கில் மது விற்கவில்லையென்றால், தனியார் ஏலம் எடுத்து சம்பாதிப்பர் அல்லது
கள்ளச்சாராய வியாபாரிகள் கொழிப்பர். எனவே தனியாருக்குப் போகும் வருமானம், அரசு
கஜானாவிற்கு கொண்டுவரவே மது விற்கிறோம்’ என்ற சாக்குப்போக்கு அரசால்
சொல்லப்படுகிறது. கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதென்றால் அதைச் சட்டப்படி
தண்டிக்கவேண்டியது போலீஸின் கடமை. அது முடியாதென்பதால், அரசே விற்பது
சரியா?
சென்ற
மாதம் சென்னையில் ஒரு அரசு ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை திருடு போய்விட்டது. இது
மாதிரி பல ஊர்களில் திருட்டு நடத்தி பல தனியார் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் போலீஸால் தடுக்க முடியவில்லை. எனவே இப்படி வீணாக தனியாருக்குப் போகும் ‘தங்க
வருமானத்தை’ அரசே எடுத்துக் கொள்ளலாமே? அதற்காக, படித்த(!) திடகாத்திரமான
பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்து ’அரசுத் திருடர்’ வேலை கொடுக்கலாமே?
இன்னொரு
பக்கம் விபச்சாரமும் நடந்துகொண்டுதான் உள்ளது, நடிகைகள் முதல் அழகிகள் வரை கைது
செய்யப்பட்டுக் கொண்டே உள்ளனர். ஆனாலும் முழுமையாக விபச்சாரத்தை ஒழிக்க
முடியவில்லை. இந்தத் தொழிலில் லட்சம் லட்சமாகப் பணம் புரள்கிறது. அநியாயமாக சில
தனியார் புரோக்கர்கள் சம்பாதிக்க்கிறார்கள்!!!. எனவே இந்தப் பணத்தை அரசு
கஜானாவிற்குத் திருப்பும்விதமாக, அரசே விபச்சார விடுதிகளை நடத்தினால்
என்ன?
’நாட்டில் கள்ளக்காதல் பெருகியதற்குக் காரணம் அரசு
விபச்சாரத்தை அனுமதிக்காததுதான்’ என்று சில வீணாய்ப் போன விஞ்சானிகள் கண்டுபிடித்து
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு வருமானத்தைப் பெருக்கும் விதமாகவும்,
கள்ளக்காதலை ஒழிக்கும் விதமாகவும் அரசே விபச்சார விடுதி நடத்தலாமே? பெண்களை மட்டும்
வைத்து நடத்தினால், கள்ளக்காதல் செய்யும் ஆண்கள் மட்டுமே பயனடைவர். அந்த ‘கள்ளக்
காதலிகள்’ என்ன பாவம் செய்தார்கள்? எனவே அரசு கருணையோடு ஆண்களுக்கும் ‘அரசு
விபச்சார விடுதி’யில் வேலை கொடுக்கலாமே?
டாஸ்மாக்கில் மது விற்பனை செய்ய என்னென்ன நியாயங்கள்
சொல்லப்படுகின்றனவோ, அத்தனையும் திருட்டுக்கும், விபச்சாரத்திற்கும் பொருந்தும்.
ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழித்துத் தான் அரசு கஜானாவை நிரப்ப
வேண்டுமா? உழைக்கும் சமூகங்களின் பணத்தை அட்டையாய் உறிஞ்சித் தான், அரசு கஜானா
நிரப்பப்பட வேண்டுமா? படித்த, நாகரீகமான சமூகம் இதை அனுமதிக்கலாமா?
’குடித்துவிட்டு அடிக்கடி எங்கோ விழுந்து கிடக்கும்
சித்தப்பாவை ஆட்டோவில் கூட்டி வரும் சித்தி, குடிகார அண்ணனின் அடி தாங்காமல் நடு
இரவில் அலறியபடி வெளியே ஓடி வரும் அண்ணி, குடிகார அப்பாவை நம்ப முடியாமல் ஒரு
பொறுக்கியுடன் ஓடி கல்யாணம் செய்து வாழ்வைத் தொலைத்த மாமா பெண்’ என பல கண்ணீர்க்
கதைகளை என் உறவினர் வட்டத்தில் பார்த்திருக்கிறேன்; பார்த்துக் கொண்டும்
இருக்கிறேன்.
சமூக
ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பல நூறு வருடங்கள் பின் தங்கியிருந்த சமூகங்கள்
மெல்ல மெல்ல முன்னேறி வரும் நேரம் இது. ஆனால் தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடையைத்
திறந்து அவர்களை மேலும் கீழே அழுத்துகின்ற வேலையைத் தான் நாம் செய்து
வருகின்றோம்.
ஊழல்,
விலைவாசி போன்ற பிரச்சினைகளை விடவும் சமூகத்திற்கு மிக அபாயகரமானது இந்த அரசு மது
விற்பனை. ஆனால் இந்தத் தேர்தலில் அது ஒரு பிரச்சினையாகவே எந்தவொரு கட்சியாலும்
முன்வைக்கப்படவில்லை என்பது தான் மிக மிக வேதனையான விஷயம்.
No comments:
Post a Comment