- Friday, 15 February 2013 22:40

சிரியாவின் வடக்கே உள்ள முக்கிய வர்த்தக நகரான அலெப்போவில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தையும்
அதற்கருகிலுள்ள முக்கிய இராணுவ விமான தளத்தையும் கைப்பற்றுவதற்கு நிகழ்ந்த முற்றுகைப் போரில் கடந்த இரு நாட்களில் மட்டும் கிளர்ச்சிப் படையிலும் அரச படையிலும் சேர்த்து மொத்தம் 150 பேர் கொல்லப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை பிரித்தனை தளமாக கொண்டு சிரியாவைக் கண்காணிக்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநரான ராமி அப்துல்-ரஹ்மானும் உறுதிப் படுத்தியுள்ளார். சிரிய கிளர்ச்சிப் படை அலெப்போவின் சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த புதன்கிழமை முதல் பாரிய முற்றுகை போரை ஆரம்பித்தனர். தமது கடும் முயற்சியின் பின்னர் இராணுவ சோதனைச் சாவடி அமைந்துள்ள பாதுகாப்புப் பிரதேசமான பிரிகேட் 80 தளத்தை கிளர்ச்சிப்படையினர் கைப்பற்றினர். எனினும் விமான நிலையமும் இராணுவ விமான ஓடு பாதைகளும் அரச படைகளின் கைவசமே தொடர்ந்து உள்ளன. இரு தரப்பினரும் ஷெல் வீச்சுக்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு கிளர்ச்சிப் படைத் தளபதி அப்துல் ஜப்பார் தகவல் அளிக்கும் போது சர்வதேச விமான நிலையத்தைக் கைப்பற்றும் வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிழக்கேயுள்ள நகரமான டெயிர் எல்-ஷௌர் இன் பெரும்பாலான பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் கிளர்ச்சிப் படையினர் இதை இழக்காமல் இருக்கக் கடினமாகப் போராடி வருகின்றனர். இங்கு அரச படைகளால் விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அரச படைகள் இரு குழந்தை உட்பட 11 பேரைக் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் கிளர்ச்சிப் படையினர் அரச படைகளின் இரு யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2011 மார்ச் மாதம் தொடங்கிய சிரிய புரட்சி இதுவரை 70 000 பேரின் உயிரை காவுகொண்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. இங்கு நடைபெறும் வன்முறைகளை நினைவில் கொண்டு சிரிய அதிபர் அசாத் பதவி விலக வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல அரபு நாடுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இதற்கு மாறாக ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சிரிய அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன. சிரியாவுக்கு ஆயுதம் வழங்கும் முக்கிய நாடான ரஷ்யா அங்கு நடைபெறும் உயிரிழப்புக்களைக் கருத்திற் கொண்டு தனது ஆயுத விற்பனையை நிறுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment