விஸ்வரூப’த்துக்கு முன்னால் கிளம்பிய
'வனயுத்தம்’ கொதிப்பு இன்னமும் அடங்கவில்லை!
வீரப்பனின்
வாழ்க்கையை மையமாக வைத்து 'வனயுத்தம்’ என்ற பெயரில் தமிழிலும், 'அட்டகாசம்’ என்ற
பெயரில் கன்னடத்திலும் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ்
என்பவர் இயக்கி இருக்கிறார். இதில் டி.ஜி.பி. விஜயகுமாராக அர்ஜுனும், வீரப்பனாக
கிஷோரும், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக விஜய லட்சுமியும் நடித்து
இருக்கிறார்கள்.
'இந்தப் படங்களை
தடைசெய்ய வேண்டும்’ என்று, முத்துலட்சுமி வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த
உயர் நீதிமன்றம், 'முத்துலட்சுமி தொடர்புடைய காட்சிகளை நீக்கிவிட்டு, படத்தை
வெளியிடலாம்’ என்று தீர்ப்பு அளித்தது. இந்தச் சூழ்நிலையில் வீரப்பனின் மனைவி
முத்துலட்சுமியைச் சந்தித்தோம்.
''ஹீரோவாக
வாழ்ந்த உங்கள் கணவரைப் பற்றி திரைப் படம் எடுப்பது உங்களுக்குப் பெருமைதானே? ஏன்
தடை விதிக்க வேண்டும் என்கிறீர்கள்?''
''சம்பந்தப்பட்ட
என்னிடம் எதுவும் கேட்காமல், ஒரு தரப்பிடம் மட்டும் கேட்டுவிட்டு கதை உருவாக்கியது
தவறு. இந்தப் படம் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பாகச்
சித்திரிக்கப்பட்டுள்ளது. என் கணவரை ஒரு கொலைகாரராகவும் கொள்ளைக் காரராகவும் காட்டி
இருக்கிறார்கள். ஒருவர் தவறு செய்கிறார் என்றால், எதனால் அவர் தவறு செய் கிறார்...
பின்புலம் என்ன என்பதை எல்லாம் சொல்ல வேண்டும். அப்படி எதுவும் சொல்லவில்லை.
யானையைச் சுட்டு தந்தத்தை வீரப்பன் கடத்துவதாகதான் படம் ஆரம்பிக்கிறது. கொலை,
கொள்ளை மட்டுமே அவரது வாழ்க்கை அல்ல. தமிழ், தமிழருக்காக வாழ்ந்த மனிதர். இதுவரை
அவரைக் குற்றவாளி என்று கோர்ட்டும் தீர்ப்பு அளிக்கவில்லை.''
''இந்தப்
படங்களில் உங்களைப் பற்றிய காட்சிகள் எத்தனை வருகின்றன? எப்படிக் காட்டி
இருக்கிறார்கள்?''
''கன்னடத்தில்
உருவாக்கிய 'அட்டகாசம்’ படத்தில் 10 காட்சிகளும், 'வனயுத்த’த்தில் எட்டு
காட்சிகளும் வருகின்றன. நான் பட்டுப்பாவாடை - சட்டை போட்டுக்கொண்டு வீரப்பனின்
மீசைக்காகவே அவரை லவ் பண்ணுவதாகக் காட்டுகிறார்கள். நான் கிராமத்து ஏழைப் பெண்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் எங்கள் ஊரில் பாவாடை - தாவணி போட்டுக்கொண்டுதான்
வெளியிலேயே போவோம். ஆனால், பாவாடை - சட்டை போட்டு கமர்சியலாகக் காட்டி, பணம்
சம்பாதிக்க நினைக்கிறார்கள். அதற்கு என் வாழ்க்கைதான் கிடைத்ததா?''
''இந்தப்
படம் வெளியானால், எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?''
''ஏ.எம்.ஆர்.ரமேஷ்
என்ற கன்னட டைரக்டர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். அவர் கன்னட நடிகர்
ராஜ்குமாருக்கு சொந்தக்காரர். காவிரி உரிமைக்காகக் குரல் கொடுத்த தமிழர்
என்பதற்காக, என் கணவரைக் கேவலப்படுத்தும் நோக்கத்தில் இந்தப் படத்தை இயக்கி
இருக்கிறார். இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் காட்சிகள்
உள்ளன. என் கணவரின் அண்ணன் மாதையனைக் கைது செய்து கோவை மத்தியச் சிறையில்
அடைக்கின்றனர். அங்கு மதானியும் இருக்கிறார். மாதையன், மதானியிடம் உதவி
கேட்பதாகவும், அதற்கு அவர், 'நிச்சயம் உதவி செய்கிறேன். எங்கள் ஆட்கள் பாம்
பிளாஸ்ட் செய்வதில் கை தேர்ந்தவர்கள்’ என்று சொல்வதாகவும் இஸ்லாமியர்களை
இழிவுபடுத்தும் வகையில் காட்சி உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்தால், இஸ்
லாமியர்களும் கொதித்து எழுவார்கள்.''
''இப்போது
முதல்வராக இருக்கும் ஜெயலலிதா ஆட்சியில்தான் வீரப்பன் கொல்லப்பட்டார். அவருக்கு
நீங்கள் சொல்ல நினைப்பது என்ன?''
''தமிழக முதல்வர்
அம்மா மீது எப்போதும் எனக்கு அன்பு உண்டு. என் கணவர் தவறு செய் தார். அதனால்
தண்டிக்கப்பட்டார். நான் சராசரிப் பெண்ணாக வாழ நினைக்கிறேன். கர்நாடக அரசு
தொடர்ந்து எனக்குத் தொல்லை கொடுக்கிறது. அதில் இருந்து என்னை நீங்கள்தான் பாதுகாக்க
வேண்டும். இந்தப் படம் சம்பந்தமாக அம்மாவைச் சந்திக்க இருக்கிறேன். அவர்கள்தான்
எனக்கு நல்வழி காட்ட வேண்டும்.''
07 February 2013 09:30:20 PM thedipaar thanks
|
No comments:
Post a Comment