பெப்ரவரி 01, 2013  at   12:46:33 PM
 
டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 6-வது நபர் மைனர் என்று சிறார் குற்ற விசாரணை அமைப்பு அறிவித்துவிட்ட நிலையில், அதுதொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.குற்றம் சாட்டப்பட்டுள்ள 6-வது நபரின் தாயார், தனது மகனை பள்ளியில் சேர்த்த தினம் நினைவில் இல்லை என்று கூறியிருக்கிறார்.

பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது தனது மகனுக்கு 5 வயது என்றும், அவனை பள்ளியில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாகவும், ஆசிரியரும் உடனே பள்ளியில் சேர்த்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
பெற்றோர் சரியான பிறந்த தேதியை குறிப்பிடாததால், பள்ளியின் தலைமையாசிரியரே ஆண்டையும், தேதியையும் குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழில் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 6-வது நபர் பள்ளியில் சேர்ந்த தினத்தை கணக்கில் கொண்டே, டெல்லி சம்பவம் நடந்த போது 17 வயது 6 மாதங்கள் என சிறார் குற்ற விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கிடையே சிறார் குற்றவியல் சட்டத்தில் குற்றம் சாட்டப்படும் நபர்களின் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் ஆலோசித்திருப்பதாக கூறிய அவர், இந்த விஷயத்தில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய 6-வது நபர் மைனர் என்பதால், அவரது மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

puthiyathalaimurai.tv thanks