Saturday, 02 February 2013 01:30

விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பில் இஸ்லாமிய அமைப்புக்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன் நேரடியாக கலந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் சென்னை வந்து நேரடியாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டால் மாத்திரமே தம்மால் இறுதி முடிவுகளை எடுக்க முடியும் என இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படத்தின் இந்தி பதிப்பு வெளியீட்டிற்காக மும்பை சென்றிருந்த கமல்ஹாசன் இன்று சனிக்கிழமை சென்னை திரும்புகிறார்.
முன்னதாக நேற்று தமிழ்நாடு முஸ்லீம் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் அப்பலோ மொஹ்மட் ஹனிபாவுடன் கமல்ஹாசனின் சகோதரரும், ராஜ்கமல் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவருமான சந்திர ஹாசனுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன், இப்பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்க தமிழ்நாடு உள்துறை அமைச்சர் ஆர்.ராஜகோபாலுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.
'நாங்கள் அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த்துள்ளோம். அதே போன்று கமல்ஹாசனும் நேரடியாக எமது சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும். அவரே திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என்ற ரீதியில் இறுதி முடிவு அவருடனேயே கலந்தாலோசித்து எடுக்க வேண்டும். மிக விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்புகிறோம். தாமதம் நேரிட நாம் விரும்பவில்லை' என ஹனிபா தெரிவித்தார்.
முன்னதாக படத்திலிருந்து காட்சிகளை நீக்குவதற்கு இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், படத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்பதையே கோரிவந்தன. எனினும் பின்னர் காங்கிரஸ் எம்.பி ஜே.எ. ஹரூன் மற்றும் முஸ்லீம் அமைப்புக்களின் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், படத்தில் நான்கு இடங்களில் காட்சிகளை நீக்குவதற்கு இணங்கியுள்ளனர். தமிழ்நாடு தௌவீத் ஜமாத் அமைப்பும் இதற்கு இணங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று மும்பையில் கமல்ஹாசன் இருந்ததால், சந்திரஹாசனதை தொடர்ந்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்குமாறு கோரியிருந்தார். எனினும் கமல்ஹாசன் நேரடியாக பங்குபெறுவதையே தற்போது முஸ்லீம் அமைப்புக்கள் விரும்புகின்றன.
இதேவேளை இரு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதுடன், படம் வெளியிடுவதால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாது எனில் உடனடியாக விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை இரத்து செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று மணிரத்ணமின் கடல், பிஜய் நம்பியாரின் டேவிட் ஆகியன திரைப்படங்களும் நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருப்பதால் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அவை கடும் போட்டியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment