- Sunday, 03 March 2013 10:30

பூரண மதுவிலக்கு கோரி தொடர்ந்து 33வது நாளாக போராட்டம் நடத்தி வரும் சசிபெருமாள் இன்று மாலை தனது முடிவை அறிவிக்கவுள்ளார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கு கோரி காந்திய வாதி சசிபெருமாள், மயிலாப்பூரில் உள்ள நெல்லை ஜெயமனி ஜனதா கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு பெருகி வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் நேரடியாக அவரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் சசிபெருமாள் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரால் பேசக்கூட முடியாது உள்ளது. படுத்த படுக்கையாக சோர்வுடன் உள்ளார். ஏற்கனவே நான்கு முறை இரத்த வாந்தியும் எடுத்துள்ளார்.
உண்ணாவிரதத்தை கைவிடும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதையும் பொருட்படுத்தாமல் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் பத்திரிகை நிருபர்கள் சசிபெருமாளை சந்தித்தனர். அப்போது அவர் ஒரு பேப்பரில் பேனாவால் எழுதி பதில் கூறினார்.
உண்ணாவிரதம் எப்போது முடிப்பேன் என்று இன்று மாலை சொல்வதாக கூறி உள்ளேன். இன்று உண்ணா விரதத்தை முடிப்பேன் என்று நான் சொல்லவில்லை. எனது முடிவை இன்று சொல்வதாக தான் சொன்னேன். இன்று மாலை மெரீனா கடற்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கிறது. அந்த போராட்டம் முடியட்டும் அதன் பிறகு முடிவு சொல்வேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சசிபெருமாளின் 33-நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வருமா? என்பது இன்று மாலை தெரியும். போராட்டத்தை வாபஸ் பெறுவாரா? அல்லது போராட்டம் தொடருமா என்பது பற்றி மாலையில் அவரது அறிவிப்பை பொறுத்து இருக்கும்.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment