ஜனாதிபதி பதவியை தமிழ்நாட்டிற்காக தியாகம் செய்தாராம் கருணாநிதி..
.
[ வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2013,
திமுக தலைவர் கருணாநிதியை
ஜனாதிபதியாக பதவியேற்கச் சொல்லி கேட்டதாகவும் ஆனால் தமிழ்நாட்டை விட்டு செல்ல
விருப்பம் இல்லாத காரணத்தால் அதை ஏற்கவில்லை என்றும் அவரது மகளும் திமுக ராஜ்யசபா
எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலைச்
சந்தித்தால் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாது என்பதே, இந்தத் திடீர்
விலகலுக்குக் காரணமா? பதில்: தி.மு.க. என்ற பேரியக்கம் தேர்தலுக்காக எந்தக்
காலத்திலும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. இலங்கைப் பிரச்னைக்காக ஆட்சி உட்பட அதிக
இழப்புகளை வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். இதற்கு முன் எண்ணிலடங்காப்
போராட்டங்களை தி.மு.க. முன்னெடுத்திருக்கிறது. அவற்றில் எல்லாம் தேர்தலை
முன்னிறுத்தியா ஈடுபட்டோம்? ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த அவலத்தைத் தேர்தல்
பிரச்னையாக முன்வைக்க விரும்பவில்லை. அப்படிச் செய்தும்விடாதீர்கள். ஈழத் தமிழர்களை
வைத்து அரசியல் செய்வது தான், அவர்களுக்கு எதிரான மிகப் பெரிய துரோகம்!. கேள்வி: ஒரு காலத்தில் தி.மு.க-வுக்கு இளைஞர்களிடையே எழுந்த
எழுச்சிக்கு விடுதலைப் புலிகள் ஆதரவும் ஒரு காரணம். அப்படியிருந்தும் விடுதலைப்
புலிகளுக்கு அவசியம் கை கொடுக்க வேண்டிய சமயம், அந்தப் பொறுப்பைத் தி.மு.க.
தட்டிக்கழித்தது என்று சொல்லலாமா? பதில்: நான் ஒன்று கேட்கவா? விடுதலைப் புலிகளுக்குத் தடை
விதிக்கக் கோரியது யார்? முதல்வர் ஜெயலலிதா தானே! தமிழகத்தில் விடுதலைப் புலிகளை
மையமாக வைத்து ஓர் உரையாடல் நிகழ்த்தக் கூட இயலாத நிலையை ஏற்படுத்தியது யார்? அதே
ஜெயலலிதா தானே! பிரபாகரனைக் கைது செய்து, அழைத்து வந்து தண்டிக்க வேண்டும் என்று
சொன்னதும் ஜெயலலிதா தானே?
தேர்தல் நெருக்கத்தில் அரசியல் சுயலாபத்திற்காக, நான் தனி ஈழத்தை
ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை ஆதரிக்கிறேன்!என்றெல்லாம் சொல்கிறார். இத்தனை
வருடங்களாக அழிக்க வேண்டும்... ஒழிக்க வேண்டும்! என்று சொன்னவர், ஒரே இரவில் எப்படி
மாறினார்? தி.மு.க. மீது கல்லெறியும் முன், ஒரு நிமிடம் நாம் யாரைத் தலையில்
தூக்கிவைத்து ஆடுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவை
எதிர்க்க இங்கே யாருக்கும் துணிச்சல் இல்லை. அதுதான் உண்மை! கேள்வி: அரசியலில் எதுவும் சாத்தியம் தானே... எதிர்காலத்தில்
மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைக்குமா? பதில்: தலைவர் அவர்களும், பேராசிரியரும், பொருளாளர் ஸ்டாலின்
அவர்களும் தெளிவாக, காங்கிரஸோடு இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டனர். இதற்கு
மேல் அதைப் பற்றிப் பேச எதுவும் இல்லை! அழகிரியை சந்திக்காமல் வர முடியுமா? கேள்வி: என்ன.. திடீரென்று மதுரைக்குச் சென்று அழகிரியைச்
சந்தித்து வந்திருக்கிறீர்கள்? பதில்: அண்ணனை தங்கை சந்திப்பது பெரிய விடயமா? அழகிரி அண்ணனைச்
சந்திக்காமல், மதுரைக்குப் போய் வர முடியுமா? மதுரைக்குப் போய் வெகு நாட்கள்
ஆயிற்று. கலை, இலக்கிய அணி பொறுப்பாளருக்கு மதுரையில் திருமணம். நான் அவசியம்
சென்றாக வேண்டும். அப்போது அண்ணன் வீட்டுக்கும் சென்றேன். அண்ணனுடன் பொதுவான பல
விடயங்களைப் பேசினேன்! கேள்வி: கட்சியின் அதிகார மையத்தைக் கைப்பற்ற அழகிரி -
ஸ்டாலின் இடையே பெரும் பிரயத்தனம் நடப்பது வெளிப்படையாகவே தெரிகிறதே? பதில்: இது பரபரப்புக்காகக் கிளப்பிவிடப்படும் கற்பனை. கட்சிப்
பணிகளில் ஈடுபாடு காட்டாதவர்களும் தலைமைக்குக் கட்டுப்படாதவர்களும் விலக்கி
வைக்கப்படுவது இயல்புதான். அதனை இவர் ஆதரவு ஆள், அவர் ஆதரவு ஆள் என்று கண், காது,
மூக்கு வைத்துப் பரப்ப வேண்டாம்! கேள்வி: இருவருக்கும் இடையிலான உரசல் குறித்த செய்திகள்
முழுக்கவே கற்பனை என்கிறீர்களா? பதில்: எல்லாக் கட்சிகளிலுமே பிரச்னை இருக்கத் தானே செய்கிறது.
அது ஏன் தி.மு.கவின் உள்கட்சி விவகாரங்களை மட்டும் பெரிது படுத்துகிறீர்கள்?
ஜனாதிபதியாக பதவியேற்க கேட்டாங்க.. கேள்வி: சமீபகாலமாக அரசியல் அரங்கில் ஜெயலலிதாவை பிரதமர்
பதவிக்குத் தகுதியானவர் என்று முன்மொழிகிறார்கள். நீங்கள் ஏன் உங்கள் தலைவர்
கருணாநிதியை பிரதமர் பதவிக்கு முன்னெடுக்கவில்லை? பதில்: எனக்குத் தெரிந்து, தலைவரை ஜனாதிபதி பதவியேற்கச்
சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு தமிழ்நாட்டை விட்டுச் செல்ல
விருப்பமில்லை. அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள்...
இருப்பார்கள். அவரை நீங்கள் என்ன விமர்சித்தாலும் அவர் உங்களோடு தான் இருப்பார்!
என்றார் அவர். செய்தி:விகடன் newindianews thanks
No comments:
Post a Comment