Wednesday, May 8, 2013
கூடங்குளம் – மக்கள் உணர்வுகளுக்கும் உயிருக்கும் மதிப்பே இல்லையா?

கூடங்குளம் அணு உலை செயல்படலாம் என்றும், இந்த அணுஉலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறும் திங்கள்கிழமை தீர்ப்பளித்துவிட்டது உச்சநீதிமன்றம்.
இந்த தீர்ப்பை நிச்சயம் அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு ஏற்காது என்பது ஒருபக்கம்…
மக்களின் உணர்வுகளுக்கும் உடல் நலன் குறித்தும் அரசுக்கோ நீதிமன்றங்களுக்கு சற்றும் அக்கறையில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்யாவுடனான உறவு பாதிக்கப்படக் கூடாது, ரூ 15000 கோடி முதலீடு வீணாகிவிடக்கூடாது, அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வேண்டும்… என்பதுதான் இவர்களின் முக்கியப் பிரச்சினையாக உள்ளதே தவிர, மக்களைப் பற்றிய சிந்தனை இரண்டாம்பட்சமாகிவிட்டது என்பது வேதனை தருகிறது.
கண்ணெதிரில் செர்னோபில், புகுஷிமா என பெரும் அழிவுகளைப் பார்த்த பிறகும், இந்த கூடங்குளம் அணு உலை தரமற்றது, பாதுகாப்பற்றது என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்த பிறகும், அணுஉலை முழுமையாக செயல்படாத நிலையிலேயே அந்தப் பகுதியைச் சுற்றி அணுக்கதிர் வீச்சு பரவ ஆரம்பித்துள்ள ஆபத்துகளை தொண்டை நீர் வற்றக் கத்திக் கூப்பாடு போட்ட பிறகும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி இந்த அணு அரக்கனை மக்கள் மத்தியில் விஷம் கக்க அனுமதிப்பது மக்கள் விரோதமே.
மின்சாரத்தைத் தயாரிக்க பாதுகாப்பான மாற்று வழிகள் இருக்கும்போது, அதை கொஞ்சமும் பரிசீலிக்காமல், அணு உலைகளை இந்தியாவில் தொடர்ந்து நிறுவலாம் என்ற முடிவை கையில் எடுத்திருப்பது, அறிவுப்பூர்வமானதும் அல்ல, மக்கள் நலம் காப்பதும் அல்ல.
அரசுகள் மக்களுக்காக என்பதை அடியோடு மறந்துவிட்டார்கள் அதிகாரத்திலிருப்பவர்கள்!
-விதுரன்
.envazhi. thanks
No comments:
Post a Comment