
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்திற்கான பால்வள ஒன்றியம் நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தில் உள்ளது. டி.ஒய்.டி. 245 திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியமான இந்த சங்கத்திற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட பால்வள சங்கங்கள் அடங்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தின் 32 பிளாக்குகளை கொண்ட 8 இயக்குனர்கள் மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 36 பிளாக்குகளை சேர்ந்த 9 இயக்குனர்கள் என மொத்தம் 17 இயக்குனர்கள் இந்த பால்வள ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி உள்ளவர்கள்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மேனும், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளருமான விஜயகுமாரும், நெல்லை மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக விவசாய அணி செயலாளர் ரமேஷ் என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியில் இறங்கினர். ரமேஷ், அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆதரவாளர்.
கடந்த 10.06.2013ல் நடந்த தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், இரண்டு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அதில், வாக்குப்பெட்டிகள் உடைக்கப்பட்டு, வாக்குச்சீட்டுகள் கிழிக்கப்பட்டன. ஆளும் கட்சிக்குள்ளே நடந்த இந்த மோதலால் எதுவும் செய்ய முடியாத தேர்தல் அதிகாரி முத்துசாமி, தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த சூழலில் சேர்மேன் விஜயகுமார், தனக்கு தேவையான 12 ஆதரவாளர்களை கடத்திக்கொண்டு ஊட்டி, கொடைக்காணல் என தனது கஷ்டடியில் வைத்திருந்தார். இது பெரிய பரபரப்பை கிளப்பவே, அமைச்சர் செந்தூர்பாண்டியனுக்கு தெரியவர, கட்சி மேலிடம் சேர்மேன் விஜயகுமாரின் ஜெயலலிதா பேரவை பதவியை பறித்தது.
கடத்தப்பட்ட ஒருவரில் புதியவன் என்பவரின் மனைவி மாடத்தி என்பவர், தன்னுடைய கணவனை கடத்திவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே 24.06.2013 திங்கள்கிழமை ஆவின் ஒன்றிய தலைவர் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
வாக்குப்பதிவுக்கு சற்று நேரத்திற்கு முன்பாக, காலை சுமார் 11 மணி அளவில் விஜயகுமார், தனது ஆதரவாளர்களோடு தேர்தல் நடக்கும் ஆவின் சங்கத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து ரமேஷ் தனது ஆதரவாளர்களோடு வந்தார். தேர்தலில் வாக்குவாதம், ரகளை ஏற்படும் என்பதால் போலீசும் குவிக்கப்பட்டிருந்தது. 12 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 12.30 மணிக்கு முடிந்தது. ஒரு மணி அளவில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், ரமேஷ் 9 வாக்குகளும், விஜயகுமார் 8 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து ரமேஷ் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது, கட்சியின் முடிவின்படியும், அறிவித்தப்படியும் என்னை தேர்வு செய்துள்ளனர் என்று சொன்னார்.
மோதலும், கடத்தலுமாக 15 நாட்களாக பரபரப்பாக இருந்த இந்த தேர்தல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
செய்தி: பரமசிவன்
படங்கள்: சக்கரவர்த்திராம்
news nakkheeran thanks
No comments:
Post a Comment