சிரியா எல்லையில் ஓசைப்படாமல் குதித்த அமெரிக்க இராணுவ படையணி!

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா இல்லையா என விவாதிக்க தொடங்கியுள்ள நேரத்தில், அமெரிக்க ராணுவத்தின் ஒரு படைப்பிரிவு ஓசைப்படாமல் ஜோர்தானில் போய் இறங்கி இருப்பதாக ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதை அமெரிக்காவோ, ஜோர்தானோ இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ரஷ்யா தமது இரு போர்க் கப்பல்களை சிரியாவை நோக்கி அனுப்பியுள்ளதாக கூறியிருந்தது.
அந்தக் கப்பல்கள் சிரியாவை வந்தடைந்து விட்டன என்ற செய்தி எந்த நிமிடமும் வரலாம். அதன்பின் சிரியாவை அமெரிக்காவோ, பிரிட்டனோ அல்லது நேட்டோ படைகளோ தாக்குவதென்றால், ரஷ்யாவை பற்றியும் யோசிக்க வேண்டிய கட்டாயம். இந்த நிலையில்தான் அமெரிக்க துருப்புகள் ஓசைப்படாமல் ஜோர்தானில் தரையிறக்கப்பட்டு உள்ளதாக ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தின் ஒரு படைப்பிரிவு, அமெரிக்க கடல்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றின் மூலம், ஜோர்தானின் தெற்கு துறைமுகமான அகாபாவில் தரையிறங்கியதாக தகவல் உண்டு.
இந்தக் கப்பலில் இருந்து சுமார் 1000 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஜோர்தானில் தரையிறக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். ராணுவ உளவு (Military intelligence) வட்டாரங்களில் கிடைத்துள்ள மற்றொரு தகவல், இந்த 1000 வீரர்கள் அடங்கிய படையணி, அமெரிக்க ராணுவத்தின் 26-வது மரைன் எக்ஸ்பெடிஷனரி போர்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்களை ஏற்றிவந்து ஜோர்தான் துறைமுகத்தில் இறக்கிய கப்பல், அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கியர்சார்ஜ் (LHD-3) தாக்குதல் கப்பல் (assault ship) என்றும் தெரிகிறது.
இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், கடந்த மார்ச் 2012-ல் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் தொடங்கிய பின், ஜோர்தானில் தரையிறக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் அதிகப்படியான எண்ணிக்கை இதுதான். ஜோர்தான் அரசும் இது தொடர்பாக மூச்சு விடவில்லை. எல்லாமே ரகசியமாக நடக்கின்றன. தரையிறக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் அன்றைய தினமே, ஜோர்தான் – சிரியா எல்லையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகன தொடர், வழமையாக பொதுமக்கள் பயன்படுத்தும் பாதைகளில் செல்லவில்லை.
சில உளவுத் தகவல்களின்படி, இரவு நேரத்தில் இந்த வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனத்தொடர், அகாபா துறைமுகத்தில் இருந்து அகாபா – ஜெராஷ் – அஜிலோன் பாதையில் சென்றுள்ளது. இது ஜோர்தானில் அதிகம் பாவனையில் இல்லாத, தெற்கு – மேற்காக செல்லும் மலைப் பாதை. அமெரிக்க ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சுமார் 30 வாகனங்கள் அடங்கிய ராணுவ வாகனத் தொடருக்கு, ஜோர்தான் ராணுவத்தினர் முன்னும் பின்னும் பலத்த பாதுகாப்பு கொடுத்தே இந்த மலைப் பாதையில் அழைத்துச் சென்றதாக தகவல் உள்ளது.
ஜோர்தானின் – சிரியா எல்லையை அடைந்து, அங்கு முகாமிட்டுள்ளார்கள் இந்த அமெரிக்க வீரர்கள். ரஷ்யா, சிரியாவை நோக்கி அனுப்பி வைத்துள்ள இரு போர்க்கப்பல்கள்களில் ஒன்று ‘லேன்டிங் ஷிப்’ என்பதையும், அதில் ராணுவத்தின் தரை நகர்வுக்கான கவச வாகனங்கள் டாங்கிகள் உள்ளன என்பதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், அமெரிக்க ராணுவ வீரர்கள் சிரியாவில் அயல் நாடான ஜோர்தானில் தரையிறங்கியுள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்க ராணுவம் சமீபத்தில்தான் ஜோர்தான் ராணுவத்துடன் இணைந்து போர்ப் பயிற்சி ஒன்றை தொடங்கியது.
அந்த போர்ப் பயிற்சிக்குப் பெயர், ‘ஈகர் லயன் 2013’. இந்த போர் பயிற்சிக்கு என்று கூறி ஜோர்தானுக்குள் அமெரிக்கா F-16 போர் விமானங்களையும், பாட்ரியொட் ஏவுகணை எதிர்ப்பு சிஸ்டங்களையும் கொண்டுவந்து இறக்கியிருந்தது. போர்ப் பயிற்சிக்குப் பின்னரும் இந்த போர் விமானங்களும், ஏவுகணை எதிர்ப்பு கருவிகளும், ‘ஜோர்தானின் வேண்டுகோளின் படி’ ஜோர்தானுக்கு உள்ளேயே சிறிது காலம் இருக்கும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. சிரியா, ஜோர்தானை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால், அதற்கு இவைதான் பதிலடி கொடுக்கும் என்பதாக தகவல் உள்ளது.
நாம் குறிப்பிட்ட 1000 ராணுவ வீரர்கள், இந்த போர்ப் பயிற்சிக்காக கொண்டுவந்து இறக்கப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் தனி யூனிட்டாக, போர்ப் பயிற்சி தொடங்கியபின் வந்துள்ளார்கள். சிரியா எல்லையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். சிரியாவை மையமாக வைத்து, ஏதேதோ ராணுவ கூட்டல் கழித்தல்கள் போடப்படுகின்றன என்பது புரிகிறது. இந்தக் கணக்கில் யாருக்கு பிளஸ் வரப்போகிறது என்பது சீக்கிரம் தெரிந்துவிடும். எதற்கும், ரஷ்யக் கப்பல்களும் வந்து சேரட்டும்!
news eutamilar thanks
No comments:
Post a Comment