
June 18, 2013 10:57 am
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி வீட்டுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி மோட்டார் சைக்கிளில் சென்று ஆறுதல் கூறினார்.
கொல்கத்தா அருகே உள்ள கம்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி கடந்த 7ம் திகதி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் 6 பேரைக் கைது செய்துள்ளனர். ஏழை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பொலிஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஹாஜி நூருல் இஸ்லாம் வந்தார்.
அவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று அந்த கிராமத்திற்குச் சென்றார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து, சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த மம்தா, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அங்கு மாணவியின் பெற்றோருக்கு மம்தா ஆறுதல் கூறினார். அங்கிருந்து புறப்பட்ட மம்தாவை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், மம்தாவிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மம்தா, மக்களை திட்டி காட்டமாக பேசினார். மாணவி பலாத்கார கொலை வழக்கில் மார்ச்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆவேசமாக கூறிய அவர், பின்னர் சமாதானம் செய்த மம்தா,அப்பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
news thamilan thanks
No comments:
Post a Comment