பிரிட்டனில் உள்ள ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தின் புகையிலை கட்டுப்பாடு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவுரை சொல்லும் சிகரெட் பாக்கெட்டுகளை தயாரித்துள்ளனர்.
முன்பு சந்தைகளில் விற்பனைக்கு வந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளில், அதை திறந்தவுடன் ‘ஹேப்பி பர்த்டே.டூ யூ..’ பாட்டு வருமில்லையா?.அதே தொழில்நுட்பம்தான் இந்த பேசும் சிகரெட் பாக்கெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது
.
சிகரெட் பாக்கெட்டை திறந்தவுடன், ‘அச்சச்சோ என்னை பிடித்தால் உங்க ஆண்மை குறைந்துவிடும், அதனால் புகை பிடிக்காதீர்கள்’ என்றெல்லாம் குரல் கொடுக்குமாம்.
புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், ஆண்மைக் குறைவு, வாழ்நாள் குறைவது என்று பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும், புகை பிடிப்பவர்கள் அதை காதில் போட்டு கொள்வதே இல்லை.
புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களால் அரசுகளுக்கும் பல்வேறு மறைமுக செலவினங்கள் ஏற்படுகின்றன. மருத்துவச் செலவு, சம்பந்தப்பட்டவரின் படிப்புக்காக செலவிடப்பட்ட தொகை என்று பல விதத்திலும் அரசுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, டிவி, ரேடியோ, பத்திரிகைகள் ஆகியவற்றில் விளம்பரம் செய்யப்படுகிறது. பொது இடங்களில் புகை பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவுக்கு பின்னரும் புகை பிடிப்பவர்கள் தங்கள் ‘பணி’யை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில்தான் இந்த புதுமையான பேசும் சிகரெட் பாக்கெட்டுகளை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் புகைப்பதை விடுவது குறித்து இலவச ஆலோசனை பெற டெலிபோன் நம்பர் இடம் பெற்றிருக்கும். அதன் பின்பும் பாக்கெட்டை திறந்தால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மேலே சொன்ன குரல் ஒலிக்கும்.
இது குறித்து விஞ்ஞானி குரோவ்போர்டு கூறுகையில், புகைப்பிடிப்பதை கைவிட வலியுறுத்தும் விளம்பரங்களை கூட, சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் மிக அழகாக தங்கள் பாக்கெட்டில் அச்சடித்து அதை ஒன்றும் இல்லாததுபோன்று ஆக்கிவிடுகின்றன.
இதேபோல் சிகரெட் பாக்கெட்டையும் மிக அழகாக தயாரிக்கின்றனர். வரும் காலத்தில் பாட்டு பாடும், மியூசிக் ஒலிக்கும் சிகரெட் பெட்டிகள் வரலாம். அதற்கு முன்னதாக அந்த தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம் என்றனர்.
தற்போது 16 வயது முதல் 24 வயதுள்ள பெண்களிடம் கொடுத்து ஆய்வு நடக்கிறது. விரைவில் அந்த வகை சிகரெட் பாக்கெட்டுகள் வெளிவரும் என்றார்.
ஆய்வு நடத்தியதில் பலர் இது புகைப்பழக்கத்தை குறைக்க உதவிபுரிகிறது என பாராட்டினர். சிலர் மட்டும் பெரும் தொல்லையாக உள்ளது என்கிறார்கள்.
|
No comments:
Post a Comment