அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் போயிங் 777 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாயினர்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்துக்கு தென் கொரியாவின் ஆசியானா விமான நிறுவனத்தை சேர்ந்த போயிங் 777 என்ற விமானம் வந்தது.
இந்த விமானம் தாழ்வாக பறந்து தரையிறங்கும் போது, விமான நிலையத்தின் அருகே சுற்றுச்சுவரின் மீது மோதி பயங்கரமாக தீப்பிடித்து கொண்டது.
இந்த விபத்தில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கோடைக்கால முகாமுக்கு சென்ற 2 இளம்பெண்கள் உயிரிழந்தனர், மேலும் 180 பேர் படுகாயம் அடைந்தனர்.
விமானத்தில் 4 விமானிகள் இருந்துள்ளனர். மூத்த விமானியின் பெயர் லீ ஜூங் மின் என்று தெரியவந்துள்ளது.
போயிங் விமானங்களை இயக்குவதில் இவருக்கு நன்கு அனுபவம் உள்ளது. இதில் மட்டுமே இவர் 3,220 மணி நேரம் பறந்துள்ளார்.
விமானிகளில் இளையவராக இருந்தவர் லீ காங் குக்(43). விமானம் தரையிறங்கும்போது, அதை இயக்கும் இருக்கையில் இருந்தவர் இவர்தான் என்று தெரியவந்துள்ளது.
போயிங் விமானத்தை இயக்குவதில் இவருக்கு வெறும் 43 மணி நேரம் மட்டுமே அனுபவம் உள்ளது.
சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இதுவரையில் இவர் போயிங் விமானத்தை தரையிறக்கியதில்லை. முதல் முறையாக அவர் தரையிறக்கும்போதுதான் விபத்து நடந்துள்ளது.
எப்போதும் மூத்த விமானியின் அறிவுரையின்படிதான், விமானத்தை ஜூனியர் விமானிகள் இயக்குவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் விமானத்தை தரையிறக்கும் போது, குறிப்பிட்ட உயரத்துக்கு குறைவாகவே விமானம் பறந்து கொண்டிருப்பதை மூத்த விமானிகள் அறிந்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக விமானத்தை மீண்டும் மேலே பறக்க விட முடிவு செய்துள்ளனர். அதற்குள் விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது.
இதனையடுத்து அனுபவம் இல்லாத ஒருவரை தரையிறக்க அனுமதித்தது ஏன் என்றும், எப்படி மூத்த விமானிக்கு தெரியாமல் போனது என்றும் பல கேள்விகள் எழுந்துள்ளன.
|
No comments:
Post a Comment