ஜனவரி 04, 2013 at 9:35:22 AM

மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான குற்றப்பத்திரிகையை டெல்லி பெருநகர நீதிபதி சூர்யா மாலிக் க்ரோவர் முன்பு காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீதும் கொலை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இயற்கைக்கு மாறாக தாக்குதல், கடத்தல், வழிப்பறி, தடயத்தை அழித்தல் என பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் குற்றம்சாட்டப்பட்ட 5பேருக்கும் சமமான பங்கு இருப்பதாக தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், வன்கொடுமையின் ஒவ்வொரு நிகழ்வையும் திட்டமிட்டு செய்திருப்பது போல் தெரிவதாக கூறினார். குற்றத்தில் 5 பேருக்கும் சம பங்கு இருப்பதை டிஎன்ஏ சோதனை உறுதி செய்திருப்பதாக கூறிய வழக்கறிஞர், 5 பேருக்கும் ஒரே மாதிரியான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்களை நீதிமன்றம் வெளியிட கூடாது என்றும் அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கின் விசாரணை நாளை முதல் நாள்தோறும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த வழக்கில், ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ், கூட்டாளிகள் பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாகூர் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 6ஆவது குற்றவாளிக்கு 17வயதே ஆவதால் அவர் மீதான வழக்கு, சிறுவர் குற்ற நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment