வீரப்பனையே
பார்க்காதவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி
தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு என்ற இடத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில்
22 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் வீரப்பன் கூட்டாளிகளான ஞானபிரகாஷ் ஜோஸப், சைமன்
அந்தோணியப்பா, பிலவேந்திரா மரிகவுடா, மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு விதிக்கப்பட்ட
மரணத்தண்டனையை உறுதிப்படுத்தி, அவர்கள் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்துள்ளார்.
இதனால் அவர்கள் எந்த நேரமும்
தூக்கில் போடலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம்
சென்னிமலை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, ஞானபிரகாஷ் ஜோஸப்பின் மனைவி
செல்வமேரி, அண்ணன் இன்னாசிமுத்து, பிலேந்திரா மரிகவுடா மனைவி கமலாமேரி மகள்
ஜோஸ்வின் பாஸ்கா மேரி, சைமன் அந்தோனியப்பா அண்ணன் ஜெயராஜ் மற்றும் மணி ஆகியோர்
நேரில் வந்து சந்தித்தனர்.
அவர்களுக்கு ஆறுதல் கூறிய வைகோ, பின்னர்
செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர்,"இந்த சம்பவத்தில் எள்ளளவும் தொடர்பு
இல்லாத இவர்கள் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளது வேதனை தருகிறது. தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட நான்கு பேரும் வீரப்பனை பார்த்தது கூட கிடையாது என கூறியும்
கர்நாடகா மாநில சிறையில் சித்ரவதை செய்துள்ளனர். அவர்களை நிர்வாணம் ஆக்கி
மின்சாரம் பாய்சியும் கொடுமைபடுத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் மொத்தம் 122
தமிழர்கள் மீது வழக்கு போடப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். இதில் 117 பேரை
தடா சிறப்பு நீதி மன்றம் விடுதலை செய்யப்பட்டும் மற்றவர்களும் வேறு வழக்குகளில்
சேர்க்கப்பட்டது போக மீதம் உள்ள நான்குபேருக்கும் இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு
இல்லை என கூறி தடா நீதி மன்றம் மரணதண்டனை விதிக்காமல் ஆயுள் தண்டனை
விதித்தது.
இவர்கள் ஆயுள் தண்டனையை ரத்து செய்யதான் உச்ச நீதிமன்றம்
சென்றனர் ஆனால் அங்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர்களின் கருணை
மனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் இந்த சம்பவத்தில்
தொடர்பு இல்லாதவர்கள் பல கொடுமையான சம்வபத்திற்கு கூட கருணை மனு
ஏற்கபட்டுள்ளது.
நான் எப்போதும் மரண தண்டனையை ஆதரிப்பவன் அல்ல, மத்திய அரசு
கொலைகார அரசாக மாறி விட்டது. கசாப் துவக்கிலிடப்பட்ட செய்தி அவர்களின் வீட்டுக்கு
கூட தெரிவிக்கவில்லை என்பது மிகவும் வேதனையான செய்தி. மனிதாபமானமற்ற செயலாக
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கருணை மனுவை நிராகரித்து விட்டார். உலகில் 132 நாடுகளில்
மரணதண்டனை சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈவு இரக்கமற்ற முறையில் மத்திய அரசு
செயல்படுகிறது இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத இவர்களை விடுவிக்க வேண்டும் தூக்கு
தண்டனை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அப்பாவியான 4 தமிழர்களின் உயிர்கள்
காப்பாற்றபட வேண்டும். கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு நான் மத்திய அரசுக்கு
கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவர்களின் வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெற
வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment