காதலிக்க மறுத்ததால் ஆசிட் ஊற்றப்பட்ட
வினோதினி, சிலமாத சிகிச்சைக்குப் பிறகு இறந்த சோகச்செய்தி வந்த அதே நேரத்தில், நாகை
மாவட்டம் சீர்காழியில் அதேபோல இன்னொரு கொடூரம். திருமணம் செய்துகொள்ள மறுத்த
காரணத்துக்காக 12-ம் வகுப்பு படிக்கும் அத்தை மகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி
இருக்கிறான் ஒரு மாபாதகன்!
சீர்காழியை அடுத்த
நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாவாடை - வசந்தா தம்பதி. கூலித் தொழிலாளிகளான
இவர்களுக்கு நான்கு மகள் கள். மூன்றாவது மகள் மதியழகி. நாங்கூர் அரசு மேனிலைப்
பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார்.
தாய் - தந்தை வயல்
வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் தனியாக படித்துக்கொண்டு இருந்தார் மதியழகி. அப்போது
வந்தான் ராஜசேகர். மதியழகியின் தாய்மாமன் ராஜாமணியின் மகன்தான் ராஜசேகர். ஒன்பதாம்
வகுப்பு படித்துள்ள ராஜசேகருக்கு ப்ளஸ் டூ படிக்கும் அத்தை மகள் மதியழகி மீது தீராத
காதல். 'எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?’ என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே
இருப்பான். 'இப்போ என்ன அவசரம்? படிப்பு முடிந்ததும் வைத்துக்கொள்ளலாம்’ என்று
மதியழகியும் இரண்டு வீட்டுப் பெரியவர்களும் சொல்லியும் ராஜசேகர் கேட்கவே இல்லை.
அன்றும் அப்படி கேட்கத்தான் வந்திருப்பான் என்றுதான் நினைத் தார்
மதியழகி.
என்ன நடந்தது?
மதியழகியின் அக்கா ஜோதி சொல்கிறார்.
''இவ படிச்ச
புத்தகத்தைக் கீழே வெச்சுட்டு அவன்கிட்ட பேசிட்டு இருந்திருக்கா. அந்தப்
புத்தகத்தை அவன் கையில் எடுத்துப் பார்த்துக்கிட்டே பேசி இருக்கான். அப்பவும்
கல்யாணத்தைப்பத்தித் தான் பேசி இருக்கான். 'படிப்பு முடியட்டும்...
பாத்துக்கலாம்னு சொன்னேனே’னு இவ பதில் சொல்லி இருக்கா. 'இந்தப் புத்தகத்துல போன்
நம்பர் இருக்கே... அது யாருது?’னு கேட்டிருக்கான். 'அது ஸ்கூல்ல என்னோட படிக்கிறவன்
நம்பர். எதாச்சும் சந்தேகம் இருந்தா கேட்குறதுக்காக வாங்கி வெச்சேன்’னு இவ சொல்லி
இருக்கா. அதைக் கேட்டதுமே அவனுக்கு கோபம் வந்து, 'எவன் கூடவோ எல்லாம் உனக்கு என்ன
பேச்சு’னு கன்னாபின்னான்னு திட்டி இருக்கான். 'கல்யாணம் ஆகு றதுக்கு முன்னாடியே
இப்படி சந்தேகப்படுறியே... உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா இன்னும் எப்படி எல்லாம்
சந்தேகப்படுவே? உன்னைக் கல் யாணம் செஞ்சுக்கவே பயமா இருக்குன்’னு இவ சொல்லி
இருக்கா. அவ்வளவுத£ன்... 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா நீ எவனையுமே கல்யாணம்
பண்ணிக்க முடியாது. என்னைக் கல்யாணம் பண்ணிக்காத நீ, உயிரோடவே இருக்கக் கூடாது’னு
சொல்லிக்கிட்டே, வண்டியில் வச்சிருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்துகிட்டு வந்து இவ
மேலே ஊத்திட்டானாம். மாமா நம்மள மிரட்டத்தான் இப்படி செய்யுது, கொளுத் தாதுன்னு இவ
நம்பிகிட்டு அப்படியே நின்னுருக்கா. ஆனா வெறியில இருந்த அவன், தீக்குச்சியைக்
கொளுத்தி போட்டுட்டான். குபுக்குன்னு பத்திகிச்சு. முகம், மார்பு, நெஞ்சுப் பகுதினு
தீப்பிடிச்சு எரியவும், இவ சாமர்த்தியமா செயல்பட்டு தீயை அணைச்சிருக்கா. அதுக்குள்ள
சத்தம் கேட்டு மத்தவங்களும் ஓடியாந்திருக்காங்க'' என்று நடந்த கொடூரத்தைக்
கண்ணீருடன் விவரித்தார்.
தீயை அணைத்ததும்
காயங்களுடன் போராடிக்கொண்டு இருந்த மதியழகியை தனது பைக்கில் ஏற்றிக்கொண்ட
ராஜசேகர், நேராக சீர்காழிக்கு கொண்டுவந்து மருத்துவமனையில் முதலுதவி மட்டும்
செய்துவிட்டு, குமாரநத்தத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துப்போய் படுக்க
வைத்துவிட்டு வெளியேறி விட்டார். மதியழகி மீது பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திய தகவல்
மதியழகியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவர, அவர்கள் பதறியடித்துக்
கொன்டு வீட்டுக்கு ஓடி வந்தனர். ஆனால், அங்கே மதியழகி இல்லை. பின்னர் ராஜசேகரின்
வீட்டில் இருக்கும் தகவல் தெரிந்து போய் பார்த்தவர்களுக்கு... முகம், மார்பு,
நெஞ்சு ஆகிய பகுதிகள் வெந்த நிலையில் மதியழகி இருந்ததைக் கண்டு பொறுக்க
முடியவில்லை. அதன்பிறகே, போலீஸில் புகார் கொடுத்துவிட்டு, மதியழகியையும்
மருத்துவமனையில் சேர்த்து இருக் கிறார்கள்.
30 சதவிகித
பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெறுகிறார் மதியழகி. ராஜசேகர் சிறையில் அடைக் கப்பட்டு இருக்கிறார்.
''சொந்தக்காரங்க சிலர் வந்து, 'நீயா கொளுத்திக்கிட்டேனு போலீஸ்ல சொல்லிடு. ராஜசேகர்
வெளியில வந்துடுவான். பிறகு, ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்யலாம்’னு பேசுறாங்க.
அது எப்படிங்க? என் தங்கச்சியை இப்படி செஞ்சவனுக்கே, இவளைக் கல்யாணம் கட்டிக்
கொடுக்க முடியும்?'' என்று கேட்கிறார் மதியழகியின் இன் னொரு அக்காவான
கோமதி.
சீர்காழி
டி.எஸ்.பி-யான பாலகுரு, ''ராஜசேகரைக் கைது செய்து ரிமாண்ட் செய்து விட்டோம். அவன்
மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, தக்க தண்டனை வாங்கித் தரப்படும்''
என்றார்.
காதல் இல்லை
என்றால் காதலியே இருக்கக் கூடாது என்னும் அளவுக்கு சில இளைஞர்களின் எண்ணம் கொடூரமாக
மாறிபோன கொடுமையை என்னவென்று சொல்ல?
/thedipaar thanks
|
No comments:
Post a Comment