- Thursday, 25 April 2013 19:16

கொல்கத்தாவை சேர்ந்த சாரதா குழு நிதி நிறுவனத்தின் மீது எழுந்துள்ள மோசடி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களிடமிருந்து சீட்டு எனும் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்று முதிர்ச்சிக்காலம் முடிவடைந்ததும் அவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பில் சாரதா குழுமம் மீதும், அந்நிறுவனத்துடன் தொடர்புடைய மேலும் 10 நிதி நிறுவனங்கள் மீதும் இந்திய பங்கு பரிவர்த்தனை மையம் (செபி) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சாரதா குழுமத்தின் மேலாண் இயக்குனர் சுதிப்தா சென், இயக்குனர் தேப்ஜானி முகர்ஜி மற்றும் அர்விந்த் சிங் சௌகான் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். சுதிப்தா சென் பங்கு சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதிப்பகம், விவசாயம், பயோ கேஸ், சுற்றுலா, ஆட்டோமொபைல், கட்டுமானம், கப்பல் துறை, கல்வி, ஏற்றுமதி, ஷாப்பிங் மால்கள் என பல்வேறு துறைகளில் சாரதா குழுமம் செயற்பட்டு வருகிறது. இவை அனைத்தின் செயற்பாடுகளையும் செபி விசாரிக்க உள்ளது.
இதேவேளை சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாக எழுந்துள்ள புகாரை அவர் மறுத்துள்ளார்.
சாரதா நிதி நிறுவனத்தின் சார்பில் வடகிழக்கு பகுதியில் டிவி சேனல் தொடங்குவதில், மேற்குவங்க அமைச்சர் நரசிம்மா ராவ் மனைவி மனோ ரஞ்சன்சிங்கும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருந்ததாகவும், புகார் எழுந்தது. எனினும் இந்த குற்றச்சாட்டை நளினி சிதம்பரம் மறுத்துள்ளார்.
இதேவேளை சாரதா நிறுவனத்தின் மீது மத்திய இயக்குனரகம் அமலாக்க பிரிவு (ED) பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. அதே போன்று இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து அசாம் குவஹத்தி காவல்துறையினர் மற்றும் மேற்குவங்க காவற்துறையினர் சாரதா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதுல்.
4tamilmedia.thanks
No comments:
Post a Comment