
மலேஷியாவை 50 ஆண்டுகளாக ஆளும் தேசிய முன்னணி ஆட்சியில் மலேஷிய
இந்திய வம்சாவளியினர் கடுமையாக வஞ்சிக்கப்பட்டதாக கூறிவந்த ஹிண்ட்ராஃப் அமைப்பு,
அடுத்த தேர்தலில் அதே தேசிய முன்னணியை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
ஆளும் தேசிய முன்னணி தனது கடந்தகால ஆட்சியில் இந்திய வம்சாவளியினர் சந்தித்த பிரச்சனைகளுக்கும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்கும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பதாகவும், ஹிண்ட்ராஃப் அமைப்பின் முக்கிய கோரிக்கைகள் நான்கை ஏற்று நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இதனாலேயே இந்த முடிவு என்றும் அந்த அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹிண்ட்ராஃப் அமைப்பு துவக்கப்பட்டது முதல், மலேஷியாவின் இந்திய வம்சாவளியினரின் முதன்மை எதிரியாக, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலேஷியாவை தொடர்ந்து ஆண்டுவரும் தேசிய முன்னணியையே இதுவரை காலமும் அந்த அமைப்பு பகிரங்கமாக குற்றம் சாட்டிவந்தது.
அப்படிப்பட்ட கட்சியை, அடுத்த தேர்தலில் திடீரென ஆதரிப்பது ஏன் என்பது குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த ஹிண்ட்ராஃப் அமைப்பின் துணைத் தலைவர் சம்புலிங்கம் விஸ்வலிங்கம், எதிர்கட்சி கூட்டணியை ஆதரிக்கவே தமது அமைப்பு ஆர்ம்பம் முதல் பேசிவந்ததாகவும், ஆனால் எதிர்கட்சி தரப்பிலிருந்து தமக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளும்கட்சி தமது முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதுடன், அதற்கான எழுத்துப்பூர்வமான உடன்படிக்கையிலும் அவர்கள் கையெழுத்திட்டிருப்பதாலேயே தமது அமைப்பு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி பொதுத் தேர்தலும், மாநில சட்டமன்றங்களுக்குமான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காக போராடி வருவதாகக் கூறும் ஹிண்ட்ராஃப் அமைப்பின் இந்த முடிவு, ஆளும் தேசிய முன்னணிக்கு சாதகமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
bbc.co.uk thanks
No comments:
Post a Comment