- Tuesday, 02 April 2013 10:09

மனைவியை துன்புறுத்திய புகாரில் சிக்கியிருந்த கேரள அமைச்சர் கணேஷ்குமார் நேற்றிரவு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த கணேஷ்குமாருக்கு யாமினி எனும் மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். மருத்துவராக இர்க்கும் யாமினி நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கடந்த 14 ஆண்டுகளாக தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அவருக்கு மேலும் பல பெண்களுடன் தகாத உறவு இருப்பதாகவும் குற்றம் சாட்டியதுடன், திருவனந்தபுரம் காவல்துறையினரிடம் கணேஷ்குமாருக்கு எதிராக புகார் மனு ஒன்றையும் அளித்தார்.
இந்நிலையில் யாமினியிடம் விவாகரத்து கோரி அவரது கணவர் கணேஷ் குமார் நேற்று குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் யாமினி தாக்கியதாக அவரும் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.
இவ்வாறு ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக தாக்கிப்பேசத் தொடங்கின. இந்நிலையில் நேற்று முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்த கணேஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து சட்டசபையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு நூலிழை பெரும்பான்மையே உள்ளது.
மொத்தம் 141 சட்டசபை தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு 73 எம்.எல்.ஏக்களும் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 68 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
யாமினி நேற்று அளித்த பேட்டியின் போது கேரள முதல்வர் உம்மன் சாண்டியை தனது தந்தையை போன்று நினைத்து பிரச்சினையை கூறி தீர்வு காணும் படி கேட்டதாகவும் ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பகிரங்கமாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் தரப்புக்கு எதிராக பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தி இருப்பதால் சட்டசபையிலும் இவ்விவகாரம் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment