நகைக்காக பெண் கழுத்தறுத்து படுகொலை: அதிர்ச்சியில் மக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013,
சென்னை
நந்தம்பாக்கம் ராணுவ குடியிருப்பில் (டிபன்ஸ் காலனி) வசித்து வந்தவர் ராதா
(வயது 75). இவரது கணவர் பாலசுப்பிரமணியம் ராணுவத்தில் அதிகாரியாக
பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஆண்
வாரிசு இல்லை. 2 மகள்கள் மட்டுமே உள்ளனர். மூத்த மகள் பெங்களூரில் வசித்து
வருகிறார். இளைய மகள் வீணா ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.
தனிமையில் வசித்து வந்த ராதாவுக்கு துணையாக வீணா தற்போது அவருடனேயே தங்கி
உள்ளார் .
இவரது மகளும் (ராதாவின் பேத்தி) பாட்டியுடனே தங்கி
இருந்து படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக இவர்கள் இருவரும்
ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் ராதா
வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியரான
சுரேஷ் என்பவர் ராதாவின் வீட்டுக்கு வந்தார். கண்பார்வை கோளாறு காரணமாக
அவதிப்பட்டு வந்த ராதாவிடம் மூக்கு கண்ணாடியை கொடுப்பதற்காக சென்ற அவர்,
வீட்டுக்குள் ராதா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி
அடைந்தார்.
பின்னர் இது குறித்து அக்கம் பக்கத்தில்
இருந்தவர்களிடம் அவர் கூறினார். உடனடியாக போலீசுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோக்குமார்
மற்றும் போலீசார் விரைந்து சென்று, ராதாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு
ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராதா
அணிந்திருந்த 10 பவுன் நகை காணாமல் போயிருந்தது. இந்த நகையை
கொள்ளையடிப்பதற்காக மர்ம வாலிபர் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
கொலை தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என்பது பற்றி போலீசார் ஆய்வு
செய்தனர். அப்போது வீட்டில் வைத்தே மது அருந்தியதற்கான அடையாளங்கள்
தென்பட்டன.
கண்ணாடி டம்ளர் ஒன்றில் குடித்து விட்டு மீதம் வைத்த மது இருந்தது.
அதில் இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். ராதாவின் வீட்டில்
லட்சுமி என்ற பெண் வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது வந்து வீட்டு
வேலைகளை செய்து விட்டு செல்வார். மற்றபடி அவரது வீட்டுக்குள் யாரும் எளிதாக
செல்ல முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை
வைத்து பார்க்கும்போதும், வீட்டில் வைத்து மது அருந்தி இருப்பதை
பார்க்கும்போதும், ராதாவுக்கும் நன்கு தெரிந்த நபர்தான் அவரை கொலை
செய்திருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்புகிறார்கள். நேற்று ராதா
வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு திட்டம் போட்டு அவருக்கு
தெரிந்தவர்களே இப் படுகொலை செய்திருப்பது மட்டும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் கொலையாளி யார்? என்பது மர்மமாகவே உள்ளது.
இது
தொடர்பாக ராதாவின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம்
தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி வீட்டில் வைத்தே
கோழிக்கறியும் சாப்பிட்டுள்ளான். மதியம் 2 மணிக்கு பின்னர் 4 மணிக்குள்
ராதா கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் டிபன்ஸ் காலனி பகுதியில்
யார்- யார் நடமாடியுள்ளனர் என்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.
கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடைய ஐதராபாத் சென்றுள்ள ராதாவின் மகள் சென்னை திரும்புகிறார்.
அவரிடம் யார்-யார் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள் என்பது பற்றி
விசாரணை நடத்தி துப்பு துலக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment