தீவிரவாதிகளின் மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், தனது கட்சி (பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்) வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக இன்று லாகூர் வந்தார். அவர் பேசுவதற்காக அங்கு 20 அடி உயர பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் இம்ரான்கான் ஏறினார். அவருடன் அவரது பாதுகாவலர்களும் பின்னால் ஏறினர்.
இம்ரான் கான் மேடையின் முகப்பை நெருங்கியபோது, திடீரென படிக்கட்டு சரிந்தது. இதனால் இம்ரான் கான் மற்றும் ஏணி படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
அதிக உயரத்தில் இருந்து தலைகீழாக விழுந்த இம்ரான் கானின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தலையில் அடிபட்டிருந்தாலும் அவர் சுய நினைவுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்
No comments:
Post a Comment