அல்லாஹ்வின் உதவி எப்போது வந்தது?
இன்று காசாவின் எதிர்காலம் பற்றி கேள்விகள் எழுகின்றன. இதயங்கள் கவலையால் நிரம்பியுள்ளன. வாய்ப்புகள் மிகவும் குறுகியதாகத் தோன்றுகின்றன. சதித்திட்டங்கள் ஒன்றின் பின் ஒன்றாக அதிகரித்து, சிலர் "இது முடிவின் தொடக்கம்" என்று கூட எண்ணுகின்றனர்.
ஆனால், இஸ்லாமிய உம்மத்தின் மீது சோதனைகள் இவ்வளவு கடுமையாக வந்தது இதுவே முதல் முறையல்ல.
நபித் தோழர்கள் தங்கள் ஈமானைப் பாதுகாக்க தாயகம், செல்வம், குடும்பம் அனைத்தையும் விட்டு அபிசீனியாவுக்கு (ஹபஷா) சென்றபோது இஸ்லாம் அழிந்துவிட வில்லை.
குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை கொலை செய்யத் திட்டமிட்டு, அவர்களின் வீட்டை எல்லாப் பக்கங்களிலும் முற்றுகையிட்டபோது, இஸ்லாமிய தஃவா முடிவுக்கு வந்துவிடவில்லை.
முஸ்லிம்கள் அனைவரும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது ஒரு தோல்வியா? அல்லது மனித வரலாற்றையே மாற்றிய மகத்தான திருப்புமுனையின் தொடக்கமா?
ஹுதைபியா உடன்படிக்கை, அந்நாளில் சில நபித் தோழர்கள் எண்ணியதுபோல் ஒரு சரணடைவா? அல்லது அல்லாஹ் அதை "தெளிவான வெற்றி" (ஃபத்ஹுன் முபீன்) என்று சூரா பத்ஹில் குறிப்பிடப்பட்ட மகத்தான வெற்றியா? அந்த உடன்படிக்கையின் மூலம் நகரங்களின் வாயில்கள் திறக்கப்படுவதற்கு முன்பே மனித உள்ளங்கள் இஸ்லாத்திற்காகத் திறக்கப்பட்டன என்பதுதான் நடந்த உண்மை.
அஹ்ஸாப் யுத்ததில், இதயங்கள் தொண்டையை எட்டும் அளவுக்கு அச்சமடைந்தபோது, இறைநம்பிக்கையாளர்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டபோது, நயவஞ்சகர்கள் "இஸ்லாம் முடிந்துவிட்டது" என்று நினைத்தபோது, அல்லாஹ் அவர்கள் கண்டிராத காற்றையும் படைகளையும் அனுப்பினான். ஒரே இரவில் உலகின் சமநிலையே மாறியது. இது ஸுரதுல் அஹ்ஸாபில் வரும் கதை.
ஸூரதுல் புரூஜை அமைதியாக ஓதி அதன் கருத்தை சிந்தித்துப் பார்த்தால், மகத்தான வெற்றி என்பதற்கு புது அர்த்தம் விளங்கும்.
அதேபோல், யூசுப் (அலை) அவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள். மனித பகுத்தறிவுச் சமன்பாட்டில் அதுதான் முடிவு. அல்லாஹ்வின் திட்டமிடல்களில் அது வெற்றியின் தொடக்கம். சிறை அவர்களுக்கு முடிவாக அமையவில்லை. கண்ணியத்திற்கு அழைத்துச் சென்ற பாலங்களாக இருந்தன. அன்றைய நிகழ்வுகளின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்த்திருந்தால், கிணற்றில் வீசப்பட்ட அந்த இளைஞர் பின்னர் எகிப்தின் உயரிய பொறுப்பை ஏற்கப் போகிறார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
இப்படி நிகழ்வுகளை அல்லாஹ்வின் பெயரால் வாசிக்க வேண்டும்.
இவ்வாறே அல்லாஹ்வின் விதிகள் சமூகங்களின் வரலாற்றில் செயல்படுகின்றன. எத்தனையோ தோல்விகள் வெற்றியின் தொடக்கமாக மாறியுள்ளன! வெளிப்படையாக இழப்பாகத் தோன்றிய பல நிகழ்வுகள், பின்னர் மிகப்பெரிய நன்மைகளுக்குக் காரணமாகியுள்ளன! மக்கள் பல கதவுகளை மூடுவார்கள்; பதிலாக, அல்லாஹ் அவர்கள் நினைத்துக்கூட பார்க்காத புதிய கதவுகளைத் திறந்திருக்கிறான்.
ஒரு சமூகத்தின் மறுமலர்ச்சி ஆடம்பர வாழ்க்கையின் நிழலில் உருவாகாது. அது சோதனைக் களங்களில்தான் உருவாகிறது. சோதனைகள் வரும்போது அணிகள் தெளிவாகின்றன. மனிதர்களின் உண்மையான குணங்களும் முகங்களும் வெளிப்படுகிறன. உண்மையாளர்கள் யார், போலித்தனமாக நடித்தவர்கள் யார் என்பது தெரியவருகிறது. கடந்த காலத் தவறுகளிலிருந்து புதிய தலைமுறைகள் பாடம் கற்று, அதிக விழிப்புணர்வுடனும் உறுதியுடனும் அனுபவத்துடனும் வளர்கின்றன.
எனவே, இன்றைய ஒரு நிலையை வைத்து முழு வரலாற்றுக்கும் தீர்ப்பு வழங்க முடியாது. நாம் காண்பது முழுப் படத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. ஆனால் அல்லாஹ்வின் திட்டமிடல் நமது குறுகிய பார்வைக்கு அப்பாற்பட்டது.
ஆம், நாம் வேதனைப்படுகிறோம். துஆ செய்கிறோம். அதே நேரத்தில், அல்லாஹ் தனது அடியார்களை ஒருபோதும் கைவிடமாட்டான் என்பதிலும் உறுதியாக நம்பிக்கை கொள்கிறோம். ஒவ்வொரு இரவிற்கும் ஒரு விடியல் உண்டு. ஒவ்வொரு நெருக்கடிக்கும் ஒரு நிவாரணம் உண்டு. ஒவ்வொரு சிரமத்திற்கும் ஒரு இலகுவும் உண்டு.
எனவே, அல்லாஹ்வின் வாக்குறுதியின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நிவாரணத்தின் திறவுகோல் அவனிடமே உள்ளது என்பதை நம்ப வேண்டும். நிச்சயமாக, கஷ்டத்துடன் இலகுவும் இருக்கிறது. நெருக்கடிக்குப் பின் விடிவும் வருகிறது.